பக்கம் எண் :

 37. திருப்பனையூர்541


397. அறையார் கழன்மே லரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே. 5

398. அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே. 6

__________________________________________________

இடியார் கடல் - கரைகளை மோதுகின்ற கடல். பொடி - விபூதி. படியார் - பூமியிலுள்ள பிறமக்கள்.

5. பொ-ரை: ஒலிக்கின்ற வீரக்கழல் மேல் அரவு ஆட முன்கைகளில் பலியேற்றுத் திரியும் பிட்சாடனராகிய சிவபெருமானது ஊர், மண்ணுலகில் சிறந்த புகழை உடைய திருவிழாக்கள் நிறையப் பறைகளின் ஒலி இடைவிடாது பயிலும் திருப்பனையூராகும்.

கு-ரை: இது பிட்சாடனமூர்த்தியின் ஊர் பனையூர் என்கின்றது. அறை - ஒலி. இறை - முன்கை.

பொறையார் மிகுசீர் விழமல்க - பூமியிற் சிறந்த புகழினையுடைய திருவிழா நிறைய. "பொறைதரத் திரண்டதாரு" இரகுவம்சம் - தசரதன் சாப. 40.

6. பொ-ரை: தம்மைப் பூசனை செய்து தொழவல்ல அடியவர்கள் அண்மையில் இருப்பவராய், அருகிருந்து ஏத்துமாறு உள்ள நீலமணிபோலும் கண்டத்தை உடைய சிவபெருமானது ஊர், தன்னைப் பணியும் அடியவர் குளிர்ந்த மலர்களைக் கொண்டு இருபோதும் தூவி வழிபடும் இடமான திருப்பனையூராகும்.

கு-ரை: நீலகண்டனது உறைவிடம் பனையூர் என்கின்றது. தொழவல்லவர் அணியார் ஏத்த என மாறுக.

அணியார் - அண்மையில் உள்ளவர்கள். மணி - நீலமணி. தணி ஆர் மலர் கொண்டு - குளிர்ந்த மலரையுங்கொண்டு. ‘பூவும் நீரும் கொண்டு‘ என்பதனை நினைவு கூர்க. தணி - தண்மை.