பக்கம் எண் :

 40. திருவாழ்கொளிபுத்தூர்559


40. திருவாழ்கொளிபுத்தூர்

பதிக வரலாறு:

திரு ஓமாம்புலியூரை வணங்கி எழுந்தருளிய பிள்ளையார் திருவாழ்கொளிபுத்தூரை யடைந்தார்கள். கார் வளர்கண்டர் தாள் பணிந்தார்கள். பார்புகழ் பதிகமாகிய ‘பொடியுடை‘ என்னும் இப்பதிகத்தை அருளினார்கள்.

பண்: தக்கராகம்

பதிக எண்:40

திருச்சிற்றம்பலம்

426. பொடியுடைமார்பினர் போர்விடையேறிப்

பூதகணம் புடைசூழக்

கொடியுடையூர்திரிந் தையங்

கொண்டு பலபலகூறி

வடிவுடைவாணெடுங் கண்ணுமைபாக

மாயவன்வாழ்கொளி புத்தூர்க்

கடிகமழ் மாமலரிட்டுக்

கறைமிடற்றானடி காண்போம். 1

__________________________________________________

1. பொ-ரை: திருநீறு அணிந்த மார்பினராய், வீரம் மிக்க விடை மீதுஏறி, பூத கணங்கள் புடை சூழ்ந்து வர, கொடிகள் கட்டிய ஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக் கூறிப் பலியேற்று, அழகிய வாள்போன்ற நெடிய கண்களையுடைய உமையொரு பாகராகிய சிவபிரானார் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அருச்சித்து அக்கறைமிடற்றார் திருவடிகளைக் காண்போம்.

கு-ரை: இது பலிகொண்டு உமையொருபாகனாய் எழுந்ருளியிருக்கும் நீலகண்டனது திருவடியை, வாழ்கொளி புத்தூரில் சென்று மலரிட்டு வணங்குவோம் என்கின்றது. ஐயம் - பிச்சை பிச்சை ஏற்பார் வாகனத்திலேறிப் பலர் புடைசூழச் செல்லுதல் அழகியது என நயந்தோன்றநின்றது. வடிவு - அழகு. புத்தூர் மிடற்றான் அடிமலரிட்டுக் காண்போம் எனக்கூட்டுக.