பக்கம் எண் :

578திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


நலனொடு தீங்குந் தானல தின்றி

நன்கெழு சிந்தைய ராகி

மலனொடு மாசு மில்லவர் வாழும்

மல்குபெ ருந்துறை யாரே. 4

452. பணிவா யுள்ள நன்கெழு நாவின்

பத்தர்கள் பத்திமை செய்யத்

துணியார் தங்க ளுள்ளமி லாத

சுமடர்கள் சோதிப் பரியார்

அணியார் நீல மாகிய கண்டர்

அரிசிலு ரிஞ்சுக ரைமேல்

மணிவாய் நீலம் வாய்கமழ் தேறன்

மல்குபெ ருந்துறை யாரே. 5

__________________________________________________

கு-ரை: பூதங்கள் ஐந்தாய்ப் புலன்வென்ற புண்ணியர் இவர் என்கின்றது. பூதங்கள் ஐந்துமாகி, தன்மாத்திரைகளாகிய ஐம்புலன்களையும் வென்று, பொய்ம்மைநீங்கிய புண்ணியர் பெருந்துறையார் என முடிக்க. அன்றி, புண்ணியராகி பொடி பூசி, இறை சிந்தையராகி மாசில்லாதவர் வாழும் பெருந்துறை எனவும் முடிக்கலாம். இப்பொருளில் நிலனொடு வாயுவுமாகிய ஓர் ஐந்து புலன் - ஐம்பூதங்களும் அவற்றிற்குக் காரணமாகிய தன்மாத்திரைகள் ஐந்தும், பொய்ம்மைகள் தீர்ந்த - அழியுந்தன்மையவாகிய விஷயசுகங்களில் பற்றற்ற, நலனொடு தீங்கும் தானலது இன்றி - நன்மையும் தீமையும் இறைவனை யன்றி வேறொன்று இன்று என எண்ணி, "நன்றே செவ்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே" என்ற நினைவு. நன்கெழு சிந்தையராகி - இறைவன் திருப்பாத கமலங்களை நன்றாக இறுகத் தழுவிய மனமுடையராகி, மலன் - ஆணவம், மாசு - மாயையும் கன்மமும்.

5. பொ-ரை: அரிசிலாற்றின் அலைகள் மோதும் கரையில் அமைந்ததும், நீல மணி போலும் நிறம் அமைந்த குவளை மலர்களின் வாயிலிருந்து வெளிப்படும் தேன் கமழ்ந்து நிறைவதுமாகிய பேணு பெருந்துறை இறைவர். பணிவுடைய துதிப்பாடல்கள் பாடும் நன்மை தழுவிய நாவினையுடைய பக்தர்கள் அன்போடு வழிபட எளியர். துணிவற்றவர்களாய்த் தங்கள் மனம் பொருந்தாத அறியாமை உடையவர்களாய் உள்ளவர்கள் பகுத்தறிவதற்கு அரியவர். அழகிய நீல நிறம் பொருந்திய கண்டத்தை உடையவர்.