456. புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானு
முணர்வரி யானுமை கேள்வன்
முள்வாய் தாளின் தாமரை மொட்டின்
முகமலரக் கயல் பாயக்
கள்வாய் நீலங் கண்மல ரேய்க்குங்
காமர்பெ ருந்துறை யாரே. 9
__________________________________________________
கு-ரை: உயிர்களின் முனைப்படக்கி
ஆட்கொண்டு அருள் வழங்கும் பெருமானிவர் என்கின்றது.
பொன் - அழகு.
மன்னன் - இராவணன். இவன் தன் மார்பையும்
தோளையுமே நம்பித் தருக்கியிருந்தானாதலின், அவற்றைப்
பயனற்றனவாக, இறைவன் காட்டவே, தனது மாட்டாமையையும்,
தலைவனாற்றலையும் உணர்ந்தான்; சாமம்பாடினான்;
இறைவன் அருளினார் என்பது. அணவு - கலக்கின்ற.
9. பொ-ரை: முட்களையுடைய தண்டின்மேல்
தாமரை மொட்டு இனிய முகம்போல் மலர, அதன்கண்
கயல்மீன் பாயத் தேனையுடைய நீல மலர் கண்மலரை ஒத்துள்ளதால்,
இயற்கை, மாதர்களின் மலர்ந்த முகங்களைப் போலத்
தோற்றந்தரும் பேணுபெருந்துறையில் உள்ள இறைவர்,
கொக்கு வடிவங் கொண்ட பகாசுரனின் வாயைப் பிளந்தும்,
நிலவுலகைத் தோண்டியும் விளங்கும் கடல் வண்ணனாகிய
திருமாலும், தாமரை மலரின் அக இதழ்கள் மேல்
உறையும் நான் முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்;
உமையம்மையின் கணவர்.
கு-ரை: பதவிகளால் மயங்கிய ஆன்மாக்களால்
அறியொணாத பெருமான் இவர் என்கின்றது. புள் -
கொக்கு. பகாசுரன் என்பவனைக் கிருஷ்ணாவதார காலத்தில்
வாயைப்பிளந்து கொன்ற வரலாறு குறிக்கப்பெறுகின்றது.
நிலங்கீண்டது - வராகாவதார வரலாறு. அல்லி
- அகவிதழ். தாமரைமொட்டு இன்முகம் மலர - தாமரையரும்பு
இனியமுகம்போல மலர, இப்பகுதி தாமரைப் போது முகம்போல
மலர, நீலம் கண்ணை ஒக்க, கயல் விழியையொக்க எல்லாதாக
மாதர் முகம் போல முற்றும் மகிழ்செய்யும் அழகிய
பெருந்துறை என அறிவித்தவாறு.
|