பக்கம் எண் :

 43. திருக்கற்குடி587


463. போர்மலி திண்சிலை கொண்டு

பூதக ணம்புடை சூழப்

பார்மலி வேடுரு வாகிப்

பண்டொரு வர்க்கருள் செய்தார்

ஏர்மலி கேழல் கிளைத்த

வின்னொளி மாமணி எங்கும்

கார்மலி வேடர் குவிக்குங்

கற்குடி மாமலை யாரே. 5

__________________________________________________

கு-ரை: தேவர்வேண்ட விடத்தைத் திருவமுது செய்தருளிய ஈசர் சிவம் என்கின்றது. இறைவா! நீ ஒருங்கு அளி என்று உம்பர்கள் ஓலம் இட எனக் கூட்டுக. இரும் களம் ஆர - பெரிய கண்டம் நிறைய. உண்ணிய - உண்ட. இது ஒரு அரும் பிரயோகம். உண் என்ற பகுதி அடியாகப் பிறக்கும் இறந்தகாலப் பெயரெச்சம் உண்ட என்பதே. உண்ணிய எனவருதல் மிக அருமை.

அளியார் பிடி வாயில் - அன்பு செறிந்த பெண் யானையின் வாயில். வெதிர் - மூங்கில். வலிய மதக்களிப்போடு கூடிய யானை தானுண்ணாது, பிடியின் வாயில் அமுதம் போன்ற மூங்கில் முளைகளை வாரிக்கொடுக்கின்ற கற்குடி நாதர், தேவர்கள் வேண்டத் தாம் விடமுண்டு, அவர்கட்கு அமுதம் அளித்தார் என்ற நயம் காண்க.

5. பொ-ரை: அழகிய பன்றிகள் நிலத்தைக் கிளைத்தலால் வெளிப்பட்ட இனிய ஒளியோடு கூடிய சிறந்த மணிகளைக் கரிய நிறமுடைய வேடர்கள் பல இடங்களிலும் குவித்துள்ள திருக்கற்குடி மாமலை இறைவர், போர் செய்யத்தக்க வலிய வில்லைக் கையில் கொண்டு, பூத கணங்கள புடை சூழ்ந்து வர மண்ணுலகில் தாமொரு வேடர் உருத் தாங்கி, முற்காலத்தில் அருச்சுனருக்கு அருள் செய்தவராவார்.

கு-ரை: வேடரான பெருமான் இவர் என்கின்றது. வேட்டுவ உருவானது அருச்சுனற்குப் பாசுபதம் அருளித்தருள் செய்ய, ஒருவர் - அருச்சுனன். ஏர் - அழகு.

கேழல் - பன்றி. கார்மலி வேடர் - கருமை நிறமிகுந்த வேடர்கள். இனம் இனத்தோடு சேரும் என்பது போல வேடர் ஆகி வேடரொடு வாழும் மாமலையர் எனற நயம் ஓர்க.