பக்கம் எண் :

592திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


44. திருப்பாச்சிலாச்சிராமம்

பதிக வரலாறு:

காழிப்பிள்ளையார் திரு அன்பிலாலந்துறை, திருமாந்துறை முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருப்பாச்சிலாச் சிராமத்திற்கு எழுந்தருளினார்கள்.

இத்தலம் மழநாட்டைச் சார்ந்தது. அந்நாட்டு மன்னன் கொல்லிமழவன் என்பவன். அவன் மகளுக்கு ‘முயலகன்‘ என்னும் நோயிருந்தது. அது எவ்வாற்றானும் தீருமாறில்லாமையையுணர்ந்த அரசன், தம் மரபின் வழக்கப்படி பாச்சிலாச்சிராமத்திறைவன் திருமுன் கொண்டுவந்து பாடுகிடத்தி வைத்திருந்தான்.

அப்போது ஒருநாள் பிள்ளையார் வருகையைத் திருச்சின்ன ஒலிகேட்டு உணர்ந்தான். எல்லாமரியாதைகள் உடனும் எதிர்கொண்டு அழைத்து வந்தான். திருவடியில் வீழ்ந்து வணங்கினான், திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றான். திருக்கோயிலை வலம்வந்த பிள்ளையார், உணர்வு அழிந்து நிலத்தில் சோர்ந்து கிடக்கின்ற இளங்கொடியை ஒத்த கன்னியை இறைவன் திருமுன்பு கண்டார். ‘இது என்ன?‘ என்று மழவனை வினாவினார். அரசன் அவரடியில்வீழ்ந்து இறைஞ்சி ‘இவள் என்மகள்; நெடுநாளாக முயலகன் என்னும் நோயால் வருந்துகின்றாள். தீர்க்கும் உபாயம் தெரியாமல் சிவபெருமான் திருமுன்பு சேர்ப்பித்திருக்கிறேன்‘ என்று தெரிவித்துக் கொண்டான்.

பிள்ளையார் மனமிரங்கி மாற்றறி வரதரை நோக்கி, பிணி தவிர்க்கும் பெரும்பதிகமாகிய ‘துணி வளர் திங்கள்’ என்னும் இதனை அருளிச்செய்தார். இறைவனைப் போற்றிநின்றார். மழவன் மகன் கதுமெனப் பிணிநீங்கி எழுந்து தந்தையின் பக்கம் சார்ந்தாள். எல்லாரும் பிள்ளையார் பெருங்கருணைக்கும் பெருமான் திருவருளுக்கும் இலக்கானார்கள். சுவாமிகள் சிலநாள் அங்கு எழுந்தருளியிருந்து திருப்பைஞ்ஞீலியை அடைந்தார்கள்.