473. கனமலர்க்கொன்றை
யலங்கலிலங்கக்
கனறரு தூமதிக்கண்ணி
புனமலர்மாலை யணிந்தழகாய
புனிதர்கொ லாமிவரென்ன
வனமலிவண்பொழில் சூழ்தருபாச்சி
லாச்சிரா மத்துறைகின்ற
மனமலிமைந்தரோ மங்கையைவாட
மயல்செய்வதோ விவர்மாண்பே. 4
__________________________________________________
கு-ரை: உலகமெல்லாந்துஞ்சும் பிரளயகாலத்திருளில்
தீயாடுவார், மாலைவேண்டுவார், வெண்ணூல் பூண்பர்,
நஞ்சடை கண்டர், ஆன்மாக்களாகிய நம்மை எளிவந்த
கருணையால் நண்ணுவார் என்கின்றது. துஞ்சு இருள் - அண்டமெல்லாம்
இறங்குங்காலமாகிய இருள். இருள் ஆடுவர் என
இயைபுபடுத்துக. நெஞ்சிடமாக நம்மை நயந்து நண்ணுவர்
எனவும் இயைக்க. ஆன்மாக்கள் தற்போதமிழந்து நம்மை
நண்ணட்டும் ஆட்கொள்வோம் என்றிராது, சென்று
பயன்படும் கால்போலத்தாமே வலியவந்து அணுகுவர் என்பதாம்.
மஞ்சு - மேகம். சிதைசெய்வது - வருத்துவது. இவர் சீர்
- இவர் புகழ்.
4. பொ-ரை: கார்காலத்தில் மலரும்
கொன்றை மலரால் இயன்ற மாலை திருமேனியில்
விளங்க, பிரிந்தவர்க்குக் கனலைத் தரும் தூயபிறைமதியைக்
கண்ணியாகச் சூடி, வனங்களில் மலர்ந்த மலர்களால்
ஆகிய மாலையைச் சூடி,அழகிய புனிதர் என்று
சொல்லும்படி எழிலார்ந்த வண்பொழில்கள் சூழ்ந்த
திருப்பாச்சிலாச்சிராமத்து அடியவருக்கு, மனநிறைவு
தருபவராய் உறையும் சிவபெருமான், இம்மங்கையை
வாடும்படி செய்து மயக்குறுத்துவது மாண்பாகுமோ?
கு-ரை: கொன்றைமாலை விளங்க, பிறைக்கண்ணியையணிந்து
அழகாய புனிதர் இவர் என அறிவிக்கின்றது. கனமலர் -
கார் காலத்து மலரும் கொன்றைமலர். கனம் - மேகம்,
தூமதி - ஒருகலைப் பிறையாதலின் களங்கமில்லாத மதி.
இறைவன் அணிந்தமையின் தூமதி எனலுமாம். வனம் - அழகு.
இங்ஙனம் பிறர் உற்ற துன்பம் போக்குதற்கு
அறிகுறியாகப் பிறையை அணிந்த பெருமான் ஒருபெண்
வாட மயல்செய்வது மாண்பாகுமா என்று வினாவியவாறு.
கணல்தரு - மதிக்கு அடை.
|