பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்61


களில் தலத்தின் திருப்பெயருக்கு ஏற்பப் பெருமான் பாம்பு அணிந்தமை போற்றப்படுதல் காண்க என்கிறார்.

3. பதிகப்பாடல் ஒவ்வொன்றன் கருத்தையும் சுருக்கமாக முதலில் தெரிவித்தல்:

அ) 91. திருவாரூர் - திரு இருக்குக்குறள்.

தியாகேசப்பெருமான் எழுந்தருளியுள்ள ஆரூரைப் பத்தியோடு மலர்தூவி வழிபடுங்கள் முத்தியாகும் என்கிறது முதற் பாடல். முத்தியாகற்குப் பிறவி இடையூறாதலின், அப்பிறப்பு, பாவத்தைப் பற்றிவருவதொன்றாதலின், பாவமோ பற்றுள்ளம் காரணமாக எழுவது ஆதலின், காரியமாகிய பிறப்பினை அறுக்க விரும்பு வார்க்குத்துறவியாதலே சிறந்த உபாயம் என்கிறது இரண்டாம் பாடல்.

நெஞ்சொடுபடாத செயலும் உண்டன்றே! அங்ஙனமின்றி புத்திபூர்வமாக மலர் தூவலே துன்பம் துடைக்க உபாயம் என்று மூன்றாம் பாடல் மொழிகிறது. துன்பம் துடைத்து உய்தியை விரும்புவீராயின் கைகளால் தொழுங்கள் பிராரத்த வினை நைந்து போம் என்று நான்காம் பாடல் நவில்கிறது.

தொழுவாரிடம் வரக்கடவ வினைகளும் விண்டுபோம் என்று ஐந்தாம் பாடல் அறைகிறது.

கீழைத்திருப்பாட்டு வினை நீக்கம் கூறியது. அவ்வினையோடு ஒருங்கு எண்ணப் பெறுவதாய் அனாதியே பந்தித்துள்ள பாசமும் கெடும்; இறைவன் நேசமாகும் என்று ஆறாம்பாடல் அறிவிக்கிறது.

இருவகை வினையும் தீரவேண்டும் என்றும், தீர்ந்தால் உலகம் முழுதும் உடைமையாம் என்றும் ஏழாம்பாடல் இயம்புகிறது.

செய்யமலர்தூவி வையம் தமதாய காலத்து உண்டாகிய தருக்கையும் களைந்து, திருத்தம் நல்குவர் தியாகேசராதலின், அவர் தலத்தைக் கையினால் தொழ வேண்டும் என்று எட்டாம் பாடல் எடுத்துரைக்கிறது.

அருள் பெற்றுச் சிறிது திருந்திப் பதவியில் நிற்பாரும், பதவிமோகத்தால் மயங்குவார், ஆயினும் அவர்கள் மிகைநோக்