507. கையடைந்த மானினோடு
காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு
மெல்லியல் வைத்தலென்னே
கையடைந்த களைகளாகச்
செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த
சிரபுர மேயவனே. 4
508. புரமெரித்த பெற்றியோடும்
போர்மத யானைதன்னை
கரமெடுத்துத் தோலுரித்த
காரண மாவதென்னே
மரமுரித்த தோலுடுத்த
மாதவர் தேவரோடுஞ்
சிரமெடுத்த கைகள் கூப்புஞ்
சிரபுர மேயவனே. 5
4. பொ-ரை: களையெடுப்போர் கைகளில்,
மிக அதிகமான களைகளாகச் செங்கழுநீர் மலர்கள்
வந்தடையும் அழகிய வயல்களால் சூழப்பட்ட சிரபுரம்
மேவிய இறைவனே! கைகளில் மான், கரிய பாம்பு ஆகியவற்றைக்
கொண்டு உனது திருமேனியில் பெரு விருப்போடு உமையம்மையை
இடப்பாகமாகக் கொண்டுள்ளது ஏனோ?
கு-ரை: கையில் மானையும் அரவையும்
அணிந்திருப்பதோடு அன்றி, மெல்லியலையும் வைத்திருப்பது
ஏன் என்கின்றது. கார் அரவு - கரும்பாம்பு. வேட்கை -
பற்றுள்ளம். கையடைந்த களைகள் - பக்கங்களையடைந்த
களைகள். செய் அடைந்த வயல்கள் - நேர்த்தி அமைந்த
வயல்கள்.
5. பொ-ரை: மரத்தை உரித்ததால் ஆன
மரவுரி என்னும் ஆடையை அணிந்த முனிவர்களும் தேவர்களும்
கைகளைத் தலைமிசைக் கூப்பி வணங்கும் சிரபுரம் மேவிய
இறைவனே! திரிபுரங்களை எரித்தழித்த பெரு வீரத்தோடு
போர் செய்ய வந்த மத யானையைக் கையால் தூக்கி
அதன் தோலை உரித்துப் போர்த்த, காரணம் யாதோ?
|