48. திருச்சேய்ஞலூர்
பதிக வரலாறு:
திருப்புறம்பயத்தை வணங்கி எழுந்தருளுகின்ற
காழிநாதர் திருச்சேய்ஞலூரை, அணுகுகின்றகாலத்து,
அவ்வூர் அந்தணர்கள் சண்டேசப்பிள்ளையாரே எழுந்தருளியதாக
எண்ணி வணங்கி வரவேற்றுப் பாராட்டினர்.
பிள்ளையார் சண்டேசர் அவதரித்த தலம் ஆகையால்
சிவிகையிற் செல்லலாகாதென்றெண்ணித் திருவடிநோவ
நடந்து திருக்கோயிலை அடைந்தார். இறைவனை வணங்கினார்.
‘நூலடைந்த கொள்கை’ என்னும் இப்பதிகத்தை
அருளிச்செய்தார். முருகன் வழிபட்டதலம் என்பதைக்காட்ட,
‘சேயடைந்த சேய்ஞலூர்‘ என்றும், சண்டேசர் வரலாற்றைத்
தெரிவிக்க ‘பீரடைந்த பாலதாட்ட‘ என்றும் தல வரலாற்றுப்
பகுதிகளைக் குறிப்பித்தருளுகிறார்கள்.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண்: 48
திருச்சிற்றம்பலம்
515. நூலடைந்த கொள்கையாலே
நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி
யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச்
சேய்ஞலூர் மேயவனே. 1
1. பொ-ரை: சேல் மீன்கள் நிறைந்த
குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில்
மேவிய இறைவனே! வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட
முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம்
நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர்
உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள்
தெளிவு பெறுமாறு கல்லால மரநிழலில் வீற்றிருந்து
அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய்?
கூறுவாயாக.
|