49. திருநள்ளாறு
பதிக வரலாறு:
திருத்தருமபுரத்தை வழிபட்டுத்
திருநள்ளாறடைந்த காழிவேந்தர் அன்புறுகாதலினால்
உள்ளுருகி இறைவனை வணங்கி, பொருவில்
திருப்பதிகமாகிய ‘போகமார்த்த’ என்னுமிதனை
எடுத்துப் பாடி, திருக்கடைக்காப்புமிட்டு,
திருநீலகண்ட யாழ்ப்பாணரை யாழில்வைத்து
வாசிக்கச் செய்து, தாமும் பாடி, எல்லோரையும்
மகிழ்வித்தார். இப்பதிகமே சமணர்செய்த
அனல்வாதத்தில் வெற்றிகண்ட பச்சைப் பதிகம்.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண் : 49
திருச்சிற்றம்பலம்
526. போகமார்த்த பூண்முலையாள்
தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள்
ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன்
கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான்
மேயது நள்ளாறே. 1
----------------------------------------------------------
1. பொ-ரை: இன்பத்துக்கு
நிலைக்களனாயுள்ளனவும் அணிகலன்கள்
பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத்
தன்னோடு அழகிய திருமேனியின் இடப் பாகமாக
ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும்
வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது
ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும்,
திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும்,
இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக்
கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி
இருக்கம் தலம் திருநள்ளாறு.
கு-ரை: இப்பதிகம் முழுவதுமே
பெருமான் விரும்பியிருக்குமிடம் நள்ளாறு
என்கின்றது. ஆர்த்த - நிறைந்த. அம்மையின்
|