பக்கம் எண் :

 49. திருநள்ளாறு635


527. தோடுடைய காதுடையன்

தோலுடை யன்தொலையாப்

பீடுடைய போர்விடையன்

பெண்ணுமோர் பாலுடையன்

ஏடுடைய மேலுலகோ

டேழ்கட லுஞ்சூழ்ந்த

நாடுடைய நம்பெருமான்

மேயது நள்ளாறே. 2

----------------------------------------------------------

திருநாமம் போகமார்த்த பூண்முலையாள் என்பது. தன்னோடும் என்றது அம்மையைத் தன்னின் வேறாக இடப்பாகத்துக்கு எழுந்தருளச் செய்தநிலையைக் குறித்தது. பொன் அகலம் பாகம் ஆர்த்த என்பது தன்னோடு ஒரு திருமேனியில் இருக்கும் நிலையைக் குறித்தது. அகலம்-மார்பு. ஆகம்-மார்பு.

குருவருள்: அனல் வாதத்தின்போது ஞானசம்பந்தர் தாம் அருளிய பாடல் தொகுப்பில் கயிறு சார்த்திப் பார்த்தபோது இப்"போகமார்த்த பூண்முலையாள்" என்னும் பதிகம் கிடைத்தது. திருமுறையில் கயிறு சார்த்திப் பார்க்கும் மரபை ஞானசம்பந்தரே தொடங்கி வைத்துள்ளதை இதனால் அறியலாம். "போகமார்த்த பூண்முலையாள்" என்னும் இத்தொடரால் இன்பதுன்ப அநுபவங்களாகிய போகத்தைத் தன்மார்பகத்தே தேக்கி வைத்து உயிர்களாகிய தம் பிள்ளைகட்குப் பாலாக ஊட்டுகிறாள் அம்மை என்ற குறிப்பும் கிடைக்கிறது. உலகில் தாய்மார்கள் தங்கள் மார்பகத்தே திருவருளால் சுரக்கின்ற தாய்ப்பாலைத் தங்கள் குழந்தைகட்குக் கரவாது கொடுத்து வரவேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. தாய்ப்பாலே குழந்தைகட்குச் சிறந்த உணவு. நோய்த்தடுப்பு மருந்து. தாய்க்கும் சேய்க்கும் நலம் பயப்பது என்பது உணர்க.

2. பொ-ரை: அம்மை பாகத்தே உள்ள இடச் செவியில் தோடணிந்த காதினை உடையவனும் தோலை ஆடையாகக் கொண்டவனும், குன்றாப்புகழ் உடையதும் போர் செய்தலில் வல்லதுமான விடை ஊர்தியனும் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவனும், அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழ்கடலாலும் சூழப்பட்ட நாடு என்னும் இந்நிலவுலகமும் உடையவனுமாகிய, எம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.

கு-ரை: தோடுடைய காது - அம்மையின் காது. பீடு - பெருமை.