51. திருச்சோபுரம்
பதிக வரலாறு:
சம்பந்தர் தமது நான்காம் முறைத்
தலயாத்திரையில் தில்லையை வணங்கித்
திருத்தினை நகருக்கு எழுந்தருளியிருக்க வேண்டும்.
அங்கே ‘வெங்கணானை’ என்னும் இப்பதிகத்தை
அருளிச் செய்தார்கள். இவ்வரலாறு
பெரியபுராணத்தில் அறியக் கூடவில்லை.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண்: 51
திருச்சிற்றம்பலம்
548. வெங்கணானை யீருரிவை
போர்த்துவிளங் கும்மொழி
மங்கைபாகம் வைத்துகந்த
மாண்பதுவென் னைகொலாம்
கங்கையோடு திங்கள்சூடிக்
கடிகமழுங் கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய்
சோபுரமே யவனே. 1
__________________________________________________
1. பொ-ரை: கங்கை திங்கள்
ஆகியவற்றை முடிமிசைச் சூடி மணம் கமழும் கொன்றை
மலர் மாலையை அணிந்து தூய திருநீறு பூசித்
திருச்சோபுரத்தில் விளங்கும் இறைவனே! கொடிய
யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய,
விளக்கமான மொழிகளைப் பேசும் மலைமங்கையை
இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின்
மாண்பு எத்தகையதோ?
கு-ரை: சோபுரம் மேயவனே!
யானைத்தோல் போர்த்து. ஒரு பாகத்து உமையையும்
வைத்துக் கொண்டது என்னவோ என்கின்றது.
வெங்கண் - கொடுமை. ஈர் உரி -
கிழிக்கப்பெற்ற தோல் ஈரமாகிய தோல்
என்றுமாம். கடி - மணம். தொங்கல் - மாலை.
|