52. திருநெடுங்களம்
பதிக வரலாறு:
திருஎறும்பியூர் முதலிய தலங்களை
வணங்கிக் கொண்டு ஆளுடைய பிள்ளையார்
திருநெடுங்களத்தை அடைந்து வழிபட்டு ‘நின்பால்
நேசம் செலாவகைத் தடுக்கும் இடும்பை
தீர்த்தருள்வாய்‘ என வேண்டி ‘மறையுடையாய்‘
என்னும் இத்திருப்பதிகத்தை
அருளிச்செய்தார்கள்.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண்: 52
திருச்சிற்றம்பலம்
559. மறையுடையாய் தோலுடையாய்
வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே
யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய்
கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய்
நெடுங்களமே யவனே. 1
__________________________________________________
1. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய
இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக்
கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை
மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே,
தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை
வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின்
குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால்
உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத
கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின்
இடர்களை நீக்கி அருள்வாயாக.
கு-ரை: மறையுடையாய் என்பது முதலிய
சொல்லித் தோத்திரித்தால் அல்லது
குறையுடையார் குற்றத்தை ஆராயாத தேவரீர்,
நிறையுடையார் துன்பத்தையும் களையவேண்டும்
என்கின்றது. மறை உடையாய் என்பது முதலியன நிறைந்த
மறையையும், அருவருக்கத் தக்க தோலையும், சாபம்
ஏற்ற மதியையும் ஒப்பமதிக்கும் பெரி
|