பக்கம் எண் :

660திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


562. மலைபுரிந்த மன்னவன்றன்

மகளையோர்பான் மகிழ்ந்தாய்

அலைபுரிந்த கங்கைதங்கு

மவிர்சடையா ரூரா

தலைபுரிந்த பலிமகிழ்வாய்

தலைவநின்றா ணிழற்கீழ்

நிலைபுரிந்தா ரிடர்களையாய்

நெடுங்களமே யவனே. 4

__________________________________________________

பொருந்திய கூற்றுவனைச் சினந்து, ‘என் அடியவன் உயிரைக் கவராதே’ என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.

கு-ரை: காலகாலராகிய நின்னடியையே கருதும் அடியாாக்ள் இடரைக்களைக என்கின்றது. நிமலா, நின் அடியே வழிபடுவான் நினைக்கருத (நீ) "என் அடியான் உயிரை வவ்வேல்" என்று அடல் கூற்று உதைத்த பொன்னடியே பரவி எனக் கூட்டிப் பொருள்காண்க.

சுமக்கும் அடியார் இடர்களையாய் என்றது, இவர்கள் வினை இடையீடாக இருந்ததாயினும் சுமைக்குக் கூலி கொடுப்பார்போல, அடியார்கள் பூவும் நீரும் சுமந்தமைக்காகவாவது நீர் அருள் வழங்கவேண்டும் என்று வற்புறுத்தியது.

4. பொ-ரை: திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான்மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

கு-ரை: மலைமகளை யொருபாலும், அலைமகளைத் தலை மேலும் வைத்து மகிழ்ந்த தேவரீர், நின்னடி மறவாத நிலையுடையார் இடரைக்களைக என்கின்றது. புரிந்த - விரும்பிய. நிலைபுரிந்தார் - அநவரத தியானத்தால் நிற்றலையுடையவர்கள்.