53. திருமுதுகுன்றம்
பதிக வரலாறு:
திருஎருக்கத்தம்புலியூரினின்று
எழுந்தருளிய பிள்ளையார் திருமுதுகுன்றத்தை
அடைந்தார்கள். திருமுதுகுன்றத்தில்
எழுந்தருளியிருந்த நாள்களுள் ஒருநாள் ‘தேவராயும்
அசுரராயும்‘ என்னும் இத்திருப்பதிகத்தை
அருளிச்செய்தார்கள். இதனைச் சேக்கிழார்
பெருமான்‘ ‘வீழ்ந்த காதலால் பலமுறை விளம்பியே‘
எனக் குறிப்பிடுகிறார்.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண்: 53
திருச்சிற்றம்பலம்
570. தேவராயு மசுரராயுஞ்
சித்தர்செழு மறைசேர்
நாவராயும் நண்ணுபாரும்
விண்ணெரிகால் நீரும்
மேவராய விரைமலரோன்
செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன்
மேயதுமு துகுன்றே. 1
___________________________________
1. பொ-ரை: தேவர், அசுரர், சித்தர்,
செழுமையான வேதங்களை ஓதும் நாவினராகிய அந்தணர்,
நாம் வாழும் மண், விண், எரி, காற்று, நீர் ஆகிய
ஐம்பூதங்கள், மணம் மிக்க தாமரை மலர் மேல்
உறையும் நான் முகன், சிவந்த கண்களை உடைய
திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள்
ஆகிய எல்லாமாகவும் அவர்களின்
தலைவராகவும் இருக்கின்ற சிவபிரான்
எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றத் தலமாகும்.
கு-ரை: இறைவனது முழுமுதற்றன்மையை
உணர்த்துகின்றது இது. செழுமறைசேர் நாவர் -
அந்தணர். மேவராய - மேவி உள்ளவராகிய. மூவராய
முதல் - மூவருமாய் அவர்கள் தலைவருமாய் இருக்கின்ற
சிவன்.
|