590. குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல்
விரும்பு வார்வினை வீரடே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________________
11. பொ-ரை: திருவோத்தூரில்,
ஆண் பனைகள் குரும்பைக் குலைகளை ஈனும்
அற்புதத்தைச் செய்தருளிய கொன்றை அரும்பும்
சடைமுடி உடைய இறைவரைப் பெருமை மிக்க திருப்புகலி
என்னும் பெயருடைய சீகாழிப் பதியுள்
தோன்றிய ஞானசம்பந்தன் போற்றியுரைத்த
இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள்
அழியும்.
கு-ரை: ஞானசம்பந்தன் சொல்லிய இவை
பத்தும் விரும்புவார்க்கு வினை ஒழியும்
என்கின்றது. முதலிரண்டடியிலும் கூறிய கருத்து,
பிள்ளையார் பாடல்களைக் கேட்டது இறைவன ருளால்
ஆண் பனைகள் பெண் பனைகளாகக் குலையீன்றன
என்பதாம்.
திருத்தொண்டர் புராணம்
திருஞானசம்பந்தர் புராணம்
விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்
பதனில் விமலர் அருளாலே
குரும்பை ஆண்ப னைஈனும்
என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம்
நிறைந்த குலைக ளாய்க்குரும்பை
அரும்பு பெண்ணை யாகியிடக்
கண்டா ரெல்லாம் அதிசயித்தார்.
- சேக்கிழார்.
|
|