பக்கம் எண் :

686திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


600. மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னு மாற்பேற் றடிகளை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: திருமாலும் சந்திரனும் தங்கியிருந்து பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழி மாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பத்திகத்தை ஓதினால் வினைகள் கெடும்.

கு-ரை: இத்தலம் மாலும், மதியும் வணங்கிய தலமாதலின் இத்தலத் திறைவனை வழிபட வினைகள் சிதறும் என்கின்றது. சோமன் - சந்திரன். பன்ன - சொல்ல.

திருக்குடந்தைப் புராணம்

காலமே கருத்தா வென்று கரைபவ ரூம ராகக்
கோலமே பொலியுங் கொங்கிற் கொடும்பனிக் காலத் தீமை
சாலமே வியது ணர்ந்து தவிர்த்துமா தேவன் சீர்த்தி
ஞாலமேல் விரித்த காழி நாடனைப் பாடி வாழ்வாம்.

- மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

மயூரகிரி புராணம்

அம்பிகைதன் முலைப்பாலில் அறிவுகுழைத்(து)

உண்டபிரா னழகார் சோம

விம்பமெனு மலர்முகத்தான் திருமருகல்

வணிகப்பெண் விடந்தீர்த் தாண்டோன்

அம்புகின்ற சைவரெலா மீடேறச்

சமணர்கழு நண்ணச் செய்த

உம்பர்பிரான் திருநீற்றான் சம்பந்தன்

இணையடிக ளுளத்துள் வைப்பாம்.

- வேதாந்த சுப்பிரமணியர்.