56. திருப்பாற்றுறை
பதிக வரலாறு:
திருத்தவத்துறையை வணங்கிப்
பிறதலங்களையும் வணங்கத் திருவுளம்பற்றிய
பிள்ளையார் திருப்பாற்றுறையை அடைந்தார்கள்.
அத்தலத்து எழுந்தருளியுள்ள ஏறுயர்த்த பெருமானை
வணங்கிக்
‘காரார்
கொன்றை ’ என்னும்
இப்பதிகத்தை
அருளிச் செய்தார்கள். இப்பதிகத்தை
அருளுகின்ற காலத்துப் பிள்ளையாரின் திருவுள்ளம்
சன்மார்க்க நெறிக்கண் நாயக
நாயகித்தன்மையில் ஈடுபடுவதாயிற்று. தலைவியாகிய
தன்னுள்ளத்தில் தலைவன் உருவன்றி வேறொன்றும்
தோன்றாத நிலையில், ஊடியும் பிரிந்தும் நுகரும்
இன்பநிலைகள் தோன்ற இத்திருப் பதிகத்தை
அருளிச்செய்தார்.
பண்: பழந்தக்கராகம்
பதிக எண்:56
திருச்சிற்றம்பலம்
601. காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யாரா ராதி முதல்வரே. 1
___________________________________________________
1. பொ-ரை: உலக மக்கள் நாள்தோறும்
வந்து வழிபட்டுப் போற்றும், ஆத்தி மலர் அணிந்த
திருப்பாற்றுறையில் விளங்கும் ஆதிமுதல்வராகிய
பெருமானார் கார்காலத்தே மலரும் கொன்றை மலர்
மாலை சூடிய திருமுடியினராய் அன்பு கனிந்த நம்
சிந்தையைத் தம்மிடமே செல்லச் செய்தார்.
கு-ரை: திருஞானசம்பந்தப்
பிள்ளையார் தம்மைப் பெண்ணாக்கி, தலைவனாகத்
திருப்பாற்றுறைத் திருமூலநாதரைப் பாவித்து
ஈடுபட்டு, சிறந்த சிந்தை தம்மிடமே செல்லச்
செய்தார் என்கின்றார். கார் ஆர் கொன்றை -
கார்காலத்துத் கொன்றை. சிந்தை
செலச்செய்தார். அடியார்கள் சிந்தையைச்
தம்மிடமே செல்லச்செய்தார். ஆரார் -
தெவிட்டாதவர். ஆதிமுதல்வர் என்றது திருமூல நாதர்
என்னும் தலத்திறைவர் பெயரைக் குறிப்பது.
|