607. வாடல் வெண்டலை சூடினார் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆட னாக மசைத்தாரே. 7
608. வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தே னெழில்கொண்டார்
பவ்வ நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மல்வல் சூடிய மைந்தரே. 8
__________________________________________________
கு-ரை: கொன்றை புனைந்த நாதர்வந்து
என் நலங்கொண்டார் என்கின்றது.
7. பொ-ரை: பாடல்கள் பலவற்றைப்
பாடும் வண்டினங்கள் சிறந்த பண்களை மிழற்றும்
திருப்பாற்றுறையுள், ஆடுதலில் வல்ல
நாகப்பாம்பைத் திருமேனியில் பல இடங்களிலும்
கட்டியுள்ள இறைவர், உலர்ந்த வெள்ளிய
தலையோடுகளை மாலையாகச் சூடியவராவர். பெரிய
இடபத்தின் மேல் ஏறி வந்து என் அழகைக் கவர்ந்து
செல்லும் குறிப்பினர்.
கு-ரை: ஆடும் அரவையணிந்த
பாற்றுறைநாதர் விடையேறிப் பிரிதலைக்
கருதினார் என்கின்றது. வாடல் வெண்தலை - உலர்ந்த
தலை. மால்விடை கோடல்செய்த குறிப்பினார் -
பெரிய இடபத்தைக் கொள்ளுதலைச் செய்த
குறிப்பினையுடைவர்; என்றது. ஊர்தியாகிய
விடையைக் கொள்ளுதல் என்பது. தலைவன் பிரிவு
கருதியதாம்.
8. பொ-ரை: கடலிடைத் தோன்றிய
நஞ்சடைந்த கண்டரும், முல்லை மலர் சூடிய மைந்தரும்
ஆகிய எம் திருப்பாற்றுறை இறைவர் விரும்பத்தக்க
திருமேனியராய், வெண்மையான திருவெண்ணீறு
அணிந்தவராய் வந்து, என் எழிலைக் கொண்டு பின்
பிரிவுத்துன்பம் தந்தவராவர்.
கு-ரை: முல்லைசூடிய இறைவர் பிரிவுத்
துன்பத்தை எனக்குப் பெரிதாக்கி எனது அழகைக்
கவர்ந்தார் என்கின்றது.
வெவ்வ மேனியர் - வெம்மையோடுகூடிய
மேனியையுடையவர். எவ்வம் செய்து - துன்புறுத்தி.
பவ்வம்நஞ்சு - கடல் நஞ்சு. மவ்வல் - முல்லை.
|