648. காண்டகைய செங்காலொண்
கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து
பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாடத்
திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென்
றடியறிய வுணர்த்தாயே. 4
__________________________________________________
கண்பு அகத்தின் - சம்பங்கோரையின்
நடுவில். ‘செருந்தியொடு கண்பு அமர்ந்து ஊர்தார்‘
(மதுரைக் 122) என்பதிலும் இப்பொருளதாதல் காண்க.
தன் துன்பங்கண்டும் தான் தூது போகாமல் இருப்பது
வருத்த மறியாமையால் என்று எண்ணிய தலைவி
வாட்டமில்லா வாரணமே என்கின்றாள்.
சம்பங்கோரையின் நடுவில் வாழ்வதால் உனக்கு
வருத்தந் தெரியாது: ஆனாலும் நீ ஒரு சேவலாதலின்
எம்போலியர் வேண்டுகோளை மொழியத்தான்
வேண்டும் என்று வற்புறுத்துகிறாள், அதற்குள்,
நான்போய்ச் சொல்லுகிறேன் அவர் கேட்பாரோ
என்ற ஐயம் வாரணத்திற்கும் உண்டாவதாக எண்ணி,
தன்தலைவன் பண்பன் என்று அறிவிக்கின்றாள்.
அதிலும் சிறப்பாக அவனியல்பு அவன் ஊருக்கும், ஊர்
இயல்பு அவனுக்கும் உண்டாகையாலே செண்பகஞ்சேர்
பொழில்சூழ் தோணிபுரம் என்ற குறிப்பால்,
வண்டுமொய்க்காத மலராகிய செண்பகம்
சேர்ந்திருப்பதால் வண்டுகள் செல்ல அஞ்சுகின்றன,
நீ கோரையின் நடுவில் வாழ்வதால் தோணி
அணுகும்போது செல்லும் வாய்ப்பிருக்கிறது என்று
எண்ணித்தான் உன்னை அனுப்புகின்றேன்
என்கின்றாள்.
4. பொ-ரை: உப்பங்கழியில் வாழும்
அழகுமிக்க சிவந்த கால்களை உடைய நாரையே! காதல்
மிக்கூர்தலால் அணிகலன்களைப் பொருந்திய அழகிய
தனங்கள் மெலிந்து பசலைநோய் பூக்கப் பெற்று உன்
அடியவள்வருந்துகிறாள்‘ என்று வானோங்கி
வளர்ந்துள்ள அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள
திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியுள்ள
ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும்
சிவபிரானை இன்றே சென்று அடைந்து என்
மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு
உணர்த்துவாயாக.
கு-ரை: கோழியும் பயன்படாதொழிய,
நாரையைப் பார்த்து வேண்டுகிறாள். நாராய்!
தோள்மெலிந்து மேனி பசந்தாள் என்று
|