பக்கம் எண் :

 60. திருத்தோணிபுரம்719


651. முன்றில்வாய் மடற்பெண்ணைக்

குரம்பைவாழ் முயங்குசிறை

அன்றில்காள் பிரிவுறுநோ

யறியாதீர் மிகவல்லீர்

தென்றலார் புகுந்துலவுந்

திருத்தோணி புரத்துறையுங்

கொன்றைவார் சடையார்க்கென்

கூர்பயலை கூறீரே. 7

_______________________________________________

தோற்று வித்தல் - பொருட் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல். மறையைத் தோற்றுவித்தல் - சொற்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல்.

7. பொ-ரை: வீடுகளின் வாயிற்பகுதியில் மடல்களை உடைய பனைமரங்களில் கட்டிய கூடுகளில் வாழ்ந்து தம் பெடைகளைத் தழுவும் சிறகுகளோடு கூடிய அன்றிற் பறவைகளே! நீவிர் பிரிவுத் துன்பத்தை அறியமாட்டீர் ஆயினும் நேசிப்பிதில் மிக வல்லவர்களாயுள்ளீர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கொன்றை மாலை அணிந்த சடை முடியினை உடைய சிவபிரானுக்கு என்பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைப்பீர்களாக.

கு-ரை: அன்னங்களாலும் பயன்பெறாது மயங்கிய தலைவி, பனை மடலில் வாழும் அன்றிலைப் பார்த்துக்கூறுகிறாள். அவள் பார்த்த காலம் பகல் ஆதலின் அன்றில்கள் கூடிக்குலாவிக் கொண்டிருந்தன. ஆதலால் அவற்றை அழைக்கின்ற அவள் உங்களுக்குப் பிரிவுத்துன்பமே தெரியாது. ஆனாலும் மிக வல்லவர்கள்; என் பயலை நோயைக் கூறுங்கள் என்கின்றாள்.

மேலும் "தென்றலார் புகுந்துலவு" என இளவேனிற்காலம் வந்தமைகாரணத்தால் தான்படும் துன்பத்தை மிகுத்துக் காட்டுகின்றாள். "கொன்றைவார் சடையார்க்கு" என்ற குறிப்பால் என் நோயைக் கூறுகின்ற நீங்கள், அவர்சடைக்கண்ணதாகிய கொன்றை மாலையைப் பெற்றுக் கொண்டு வந்து கொடுத்தால், அது பெற்றாயினும் உய்வேன் என்று,உபாயம் அறிவித்தாள். முன்றில் - வாயில். மடற் பெண்ணை - மட்டைகளோடு கூடிய பனை. குரம்பை - கூடு. முயங்கு சிறை - தழுவியிருக்கின்ற சிறகுகள் . கூர் பயலை - மிக்க பசலைநோய்.