663. தோடுடையான் குழையுடையா
னரக்கன்றன் றோளடர்த்த
பீடுடையான் போர்விடையான்
பெண்பாக மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டங்
குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையா னாடுடையான்
கணபதீச் சரத்தானே. 8
664. ஆனூரா வுழிதருவா
னன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான்
வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டங்
குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான்
கணபதீச் சரத்தானே. 9
__________________________________________
8. பொ-ரை: திருச்செங்காட்டங்குடியில்
விளங்கும் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள
இறைவன், ஒரு காதில் தோட்டினை அணிந்தவன்.
பிறிதொரு காதில் குழை அணிந்தவன். கயிலையைப்
பெயர்த்த இராவணனின் தோள்களை நெரித்த பெருமை
உடையவன், போரிடும் காளையை உடையவன். பெண்ணை ஒரு
பாகமாகக் கொண்டவன். மிகவும் பெரியவன்.
பெருமைக்கட்கு உரியவன். பூதகணங்களோடு
சேர்ந்தாடும் சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக்
கொண்டவன். நாடுகள் பலவற்றிலும் கோயில்
கொண்டு அருள்புரிபவன்.
கு-ரை: தோடும் குழையும் பீடும்
உடையவன் என்பது முதலாக அவன் சிறப்பியல்புகள்
பலவற்றைச் செப்புகிறது. தோடு சத்தி
பாகத்திற்குரியது. குழை சிவத்தின்
பாகத்திற்குரியது. அரக்கன் - இராவணன், பீடு -
பெருமை.
9. பொ-ரை: விடைமிசை ஏறி அதனை
ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன். முன்னொரு
காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர்
அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு வானளாவ
|