666. கறையிலங்கு மலர்க்குவளை
கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயற்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச்
செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார்
வானுலகத் திருப்பாரே. 11
திருச்சிற்றம்பலம்
__________________________________________
11. பொ-ரை: கருமை பரவி
விளங்கும் மலராகிய குவளை கண்போல் மலர்ந்து
விளங்குவதும் மணம் கமழும் சோலைகளிலுள்ள தேனின்
மணம் வீசுவதுமான, வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்
பதியில் தோன்றிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன்
கரைகளோடு கூடி நீர்நிறைந்து தோன்றும் வயல்கள்
சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் விளங்கும்
கணபதீச்சரத்து இறைவர் மீது பாடிய
வேதப் பொருள் நிறைந்த இத் திருப்பதிகத் தமிழ்
மாலையை ஓதவல்லவர் வானுலகில் வாழ்வர்.
கு-ரை: இத்தலத்துத்தமிழில்
வல்லவர்கள் வானுலகத் திருப்பவர் என்கின்றது கறை
இலங்கு மலர் - நீலமலர். நறை - தேன். சிறை - கரை.
படப்பை - தோட்டம். மறை இலங்கு தமிழ் - வேதக்
கருத்துக்கள் விளங்கும் தமிழ்ப் பாடல்கள்.
வானுலகத்து இருப்பார் - புண்ணிய லோகந் துய்க்ககச்
சென்ற தேவர்கள் போலாது அயனால் படைக்கப்பட்ட
பதினெண் கணத்தவர்களில் ஒருவராக என்றும்
இருப்பார்.
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
யாரேஎம் போல அருளுடையார்
இன்கமலத்
தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து
- நம்பியாண்டார் நம்பி.
|
|