83. திருஅம்பர்மாகாளம்
பதிக வரலாறு:
திருநாவுக்கரசு சுவாமிகளோடும்
அடியார்கள் புடைசூழத் திருமாகாளத்தை வணங்கிப்
பதிக இன்னிசை பாடிய பிள்ளையார்
திருஅம்பர்மாகாளத்தைச் சேர்ந்தார்கள்.
‘அடையார் புரம்‘ என்னும் இப்பதிகத்தை
அருளிச்செய்தார்கள்.
பண் : குறிஞ்சி
பதிக எண்: 83
திருச்சிற்றம்பலம்
893. அடையார் புரமூன்று மனல்வாய்
விழவெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப்
பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.
1
894. தேனார் மதமத்தந் திங்கள்
புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண்
டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த வல்ல லடையாவே. 2
____________________________________________________
1. பொ-ரை: பகைவராகிய
அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அனலிடைப்பட்டு
அழியுமாறு கணை எய்தவனும், நீரைத் தேக்கும்
மடைகளையுடைய புனல் வளம் நிறைந்த அம்பர்
மாகாளத்தில் எழுந்தருளிய விடை எழுதிய கொடியை
உடைய எம் தந்தையும், வெண்மையான பிறை மதியை
அணிந்த சடையினனும் ஆகிய பெருமான் திருவடிகளை
ஏத்துவாரை வினைகள் சாரா.
கு-ரை: இப்பதிகத்தால்
அம்பர்மாகாளத்தெழுந்தருளிய இறைவனுடைய திருவடியை
ஏத்தவல்லவர்க்கு வினை சாரா, தவம் சாரும்,
இன்பம் எய்தும் என்பது அறிவிக்கப்படுகின்றது.
அடையார் - பகைவர். என்றது திரிபுராதிகள். மடை -
வாய்க்கால் மடை.
2. பொ-ரை: தேன் பொருந்திய
செழுமையான ஊமத்தம் மலர், பிறைமதி, கங்கை
ஆகியவற்றை முடியில் சூடி, வானளாவிய பொழில்
|