பக்கம் எண் :

898திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


895. திரையார்புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரு நம்பான் கழனாளும்
உரையா தவர்கண்மே லொழியா வூனம்மே. 3

896. கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன்சடை வைத்த
எந்தை கழலேத்த விடர்வந் தடையாவே. 4

____________________________________________________

சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய ஊன் பொருந்திய தலையோட்டில் பலியேற்றுத் திரியும் வாழ்க்கையை மேற்கொண்ட பெருமான் திருவடிகளைப் போற்றத் துன்பங்கள் நம்மை அடையா.

கு-ரை: ஊனார் தலை - பிரமகபாலம். ஆனான் - இடபத்தை யுடையவன். அல்லல் - துன்பம்.

3. பொ-ரை: அலைகள் பொருந்திய கங்கை நதியோடு, கண்டாரை மகிழ்விக்கும்சிறப்பு வாய்ந்த பிறைமதியை முடியில் சூடி, மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய வெண்மையான விடையை ஊர்ந்து வரும் சிவபிரான் திருவடிப் புகழை நாள்தோறும் உரையாதவர்கள் பால் பழிபாவங்கள் நீங்கா.

கு-ரை: திரை - அலை. மேனி குறைதலாகிய வறுமையும் இறைவனைச் சார்ந்து கழிந்தமையின் செல்வமதியாயிற்று. விரை - மணம். நரை - வெண்மை. ஊனம் - பழி. இப்பாடல் எதிர்மறை முகத்தான் வற்புறுத்தியது.

4. பொ-ரை: பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் அழகிய வரி வண்டுகள் பாடும் மந்தச் சுருதி இசை நிறைந்து விளங்கும் இயற்கை எழில் வாய்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, மணம் கமழும் கொன்றை மலர்களை இயல்பாக மணம் வீசும் தனது சிவந்த சடைமிசை வைத்துள்ள எம் தந்தையாகிய சிவபிரானின் திருவடிகளை ஏத்தினால் இடர்கள் நம்மை வந்தடைய மாட்டா.

கு-ரை: கொந்து அண் பொழில் - கொத்துக்கள் நிறைந்த நந்தவனம். கோலம் - அழகு. மந்தம் - தென்றற்காற்று.