897. அணியார் மலைமங்கை யாகம்
பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் றுதைபொற் கழனாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே.
5
898. பண்டாழ் கடனஞ்சை யுண்டு
களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா
குற்றம்மே. 6
____________________________________________________
5. பொ-ரை: அழகு பொருந்திய
மலைமங்கையாகிய பார்வதிதேவியைத் தனது உடலின்
இடப்பாகமாய்க் கொண்டவனாய் மணிகளோடு கூடிய
புனல் வளம் உடைய அம்பர் மாகாளத்தில்
எழுந்தருளிய, துணிக்கப்பட்ட கோவண உடையினன்
ஆகிய சிவபெருமானின் பொன்னிறம் துதைந்த
திருவடிகளை நாள்தோறும் பணியாதவரைப் பாவம்
நீங்கா.
கு-ரை: அணி - அழகு. ஆகம் - உடல்,
மணியார் புனல் - முத்துக்களோடு கூடிய தண்ணீர். துணி
ஆர் உடை - துணிக்கப்பெற்ற கோவண உடை.
பணியாதவர்மேல் பாவம் பறையா என இதுவும்
எதிர்மறை முகத்தான் விளக்கியது.
6. பொ-ரை: முற்காலத்தில்
ஆழ்ந்த கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டு,
களிப்புற்று வண்டுகள் மொய்க்கும் சோலைகள்
சூழ்ந்த அம்பர்மாகாளத்தில்
எழுந்தருளியிருப்பவனும், பகைவராகிய அசுரர்களின்
முப்புரங்களும் வெந்தழியுமாறு மேருமலையை
வில்லாகக் கொண்டருளியவனுமான சிவபெருமான்,
திருவடிகளைப் போற்ற, குற்றங்கள் நம்மைக் குறுகா.
கு-ரை: பண்டு ஆழ் கடல் நஞ்சை
எனப்பிரிக்க. அமுதமுண்டு களிப்பது இயல்பாயினும்,
இவர், நஞ்சையுண்டு களித்தார் என்றது மிக நயமான
பகுதி. அமுதுண்டு களிப்பார் அறிவு மயங்குவார்.
நஞ்சை உண்டு இவர் களித்த களிப்பு இத்துணைத்
தேவர்க்கும் இன்பம் செய்தோமே என்றதால்
விளைந்தது. களிமாந்தி - களிப்பையடைந்து.
விண்டார் - பகைவர். இது இத்தலவரலாறு. இத்
தலத்திறைவன் பெயர் காளகண்டேசுவரர் என்பதுங்
காண்க.
|