பக்கம் எண் :

732திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


62. திருக்கோளிலி

பதிக வரலாறு:

மல்லல் நீடிய வலிவலம் வணங்கிப் போதரும் பிள்ளையார் கோளிலிப் பெரும்பதியை யடைந்து கோளிலிப்பெருமான் குரைகழலைக் கும்பிட்டு "நாளாய போகாமே" என்னும் இத்திருப்பதிகத்தைப் பாடினர்.

பண்: பழந்தக்கராகம்

பதிக எண் : 62

திருச்சிற்றம்பலம்

667. நாளாய போகாமே

நஞ்சணியுங் கண்டனுக்கே

ஆளாய வன்புசெய்வோ

மடநெஞ்சே யரனாமம்

கேளாய்நங் கிளைகிளைக்குங்

கேடுபடாத் திறமருளிக்

கோளாய நீக்குமவன

கோளிலியெம் பெருமானே. 1

__________________________________

1. பொ-ரை: அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: வாழ்நாள் வீணாளாகக் கழியாதவண்ணம். நீலகண்டனுக்கு ஆளாய் அன்பு செய்வோம்; நமக்கு மட்டுமன்று நீக்குபவன் கோளிலிப் பெருமான் என்கின்றது. மட நெஞ்சே - நம்சுற்றமுங்கூட நன்மையடையும் உபாயத்தை அருளிச் செய்து கோள்களை அறியாமையையுடைய நெஞ்சமே. கேளாய் - கேட்பாயாக. கிளை கிளைக்கும் - சுற்றம் சுற்றத்திற்குச் சுற்றம் இவைகட்கும். கோள் - மாறுபாடு.