670. வந்தமண லால்இலிங்கம்
மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் றன்கருமந்
தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ்
சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான்
கோளிலியெம் பெருமானே. 4
__________________________________
இயமனது உயிரைப் போக்கி அம்மார்க்கண்டேயனுக்கு
அன்றே என்றும் பதினாறாண்டாக இருக்கும் வரமளித்தவன்,
பொன் போல் விளங்கும் கொன்றை மலரைச் சூடிய எம்
திருக்கோளிலிப் பெருமானாவான்.
கு-ரை: அன்றலர்ந்த புதுப்பூக்களைக்கொண்டு
இருக்குவேத மந்திரங்களுடன் பூசைசெய்த மார்க்கண்டன்
மேல்வந்த காலனை உதைத்து மார்க்கண்டற்கு உயிர்வழங்கிய
இறைவன் இவன் என்கின்றது.
நகுநாண்மலர் - மலர்ந்த புதுப்பூ. ஒன்றி
- மன ஒருமைப் பாட்டுடன். கன்றி - கோபித்து. கண்டு -
போகக் கண்டு.
4. பொ-ரை:மண்ணியாறு கொண்டுவந்த மணலால்
அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக்
கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து
வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச்
சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன்
தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப்
பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச்
சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில்
விளங்கும் எமது பெருமான் ஆவான்.
கு-ரை: மண்ணியாற்றங் கரையில் மணலால்
இலிங்கம் தாபித்துப் பாலபிஷேகஞ்செய்த
விசாரசருமர் செயலையறிந்து பூசனைக்கு இடையூறுசெய்த
தந்தை எச்சதத்தனை ஒறுத்தலும் அவருக்குச் சண்டேசப்
பதவியைக் கொடுத்து, சூடிய மாலையும் உண்டகலமும்
அருளிச் செய்தவர் இவர் என்கின்றது. சிதைப்பான்
- இடற. கொந்து அணவும் மலர் - பூங்கொத்துக்களில் உள்ள
மலர்.
|