671. வஞ்சமனத் தஞ்சொடுக்கி
வைகலுநற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும்
நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப்
பாசுபத மீந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங்
கோளிலியெம் பெருமானே. 5
672. தாவியவ னுடனிருந்துங்
காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி
யங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி
யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற்
கோளிலியெம் பெருமானே. 6
__________________________________
5. பொ - ரை : வஞ்சகமான மனத்தைத் திருத்தி
ஐம்பொறிகளை ஒடுக்கி நாள்தோறும் நல்ல பூசையை
இயற்றி, நஞ்சினை அமுதாக உண்டருளிய நம்பியே என நினையும்
சிவபக்தனும், பாண்டவர் ஐவரில் ஒருவனுமான
அருச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கி
மகிழ்ந்தவன். கொஞ்சும் கிளிகள் வானவெளியில்
பறக்கும் திருக்கோளிலியில் விளங்கும் எம்
பெருமான் ஆவான்.
கு-ரை: பொறிகளை யொடுக்கித் தவஞ்செய்த
விஜயனுக்குப் பாசுபதம் தந்த பரமன் இவர் என்கின்றது.
அஞ்சு - மெய் வாய் முதலிய பொறிகள் ஐந்து. வைகலும்
- தினந்தோறும். பஞ்சவர் - பாண்டவர். பார்த்தன்
- அருச்சுனன். மஞ்சு - ஆகாயம்.
6. பொ-ரை: மூவுலகங்களையும் தாவி அளந்த திருமால்
தன்னோடு உடனிருந்தும் திருவடிகளைக் காண இயலாதவாறு
சிறந்து நின்ற தற்பரனாகிய சிவபிரானை, ஐம்புலன்களையும்
ஒடுக்கிக் கருணையாளனாக உயிர்க்குயிராய்க்
காதலித்து வழிபடும் நாவால் புகழத்தக்க பெரியவராகிய
நமிநந்தி அடிகளுக்கு அருள் புரிந்தவன். தலைமை சான்றமலர்
மரங்களை உடைய திருக்கோளிலியில் விளங்கும் எம்
பெருமானாவான்.
|