பக்கம் எண் :

 63. திருப்பிரமபுரம்747


684. முலையாழ்கெழுவ மொந்தைகொட்ட

முன்கடை மாட்டயலே

நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய்

நீநலம் வவ்வுதியே

தலையாய் கிடந்திவ் வையமெல்லாந்

தன்னதொ ராணைநடாய்ச்

சிலையான்மலிந்த சீர்ச்சிலம்பன்

சிரபுர மேயவனே. 7

__________________________________________________

இடும் சுவைமிக்க பலியாகிய உணவை ஏலாது அவர்களின் அழகை வவ்வுகின்றாயே; இது நீதியோ?

கு-ரை: பூந்தராய்மேவியவனே! பலி வவ்வாயாய் அவர்கள் நலம் வவ்வுதியே என்கின்றது. வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே எனப் பிரித்துப் பொருள் கொள்க. பூண் அரையர் அவர்க்கு ஆதியாய அடல் மன்னன் - மன்னர்க்கெல்லாம் முதலாகிய வலிமைமிக்க திருமால். காக்கும் மன்னர்க்கு எல்லாம் தலைவன், காத்தற்றெய்வமாகிய திருமால் என்ற ஒற்றுமைபற்றி உரைக்கப்பெற்றது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன். என்பதும் இந்த இயைபுபற்றியே. ஆதிவராகமான திருமால் இரணியனைக் கொன்ற பழிபோகப் பூக்களைக்கொண்டு பூசித்தமையால் பூந்தராய் என அழைக்கப்பெற்றது எனத் தலப்பெயர்க்காரணம் கூறியவாறு.

7. பொ-ரை: கரவாக அமுதுண்டதால் திருமாலால் வெட்டப்பெற்றுத் தலைமாத்திரமாய் நின்ற வில்வீரனாகிய சிலம்பன் என்னும் இராகு வழிபட்டு இவ்வையகமெல்லாவற்றையும் தன் ஆணைவழி நடத்தி ஆட்சி புரிந்த சிரபுரம் என்னும் நகரில் எழுந்தருளிய இறைவனே! முல்லையாழை மீட்டி மொந்தை என்னும் பறை ஒலிக்கச் சென்று வீட்டின் முன் கடையின் அயலே நின்று உண்பதற்காக அன்றிப் பொய்யாகப் பிச்சை கேட்டு மகளிர் தரும் உணவைக் கொள்ளாது நீ அவர்தம் அழகினைக் கவர்வது நீதியோ?

கு-ரை: சிரபுரமேயவனே! நிலையாப்பிச்சையாக ஐயம் ஏற்காது நலம் வவ்வுதியே என்கின்றது. முலை யாழ் கெழுவ - முல்லை யாழ் சுரம் ஒத்து ஒலிக்க. கெழும் என்பதும் பாடம். நிலையாப்பலி என்றது தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தையடக்க ஏற்றுக் கொண்ட பிச்சையேயன்றி நிலைத்ததன்று என்பது விளக்கிற்று.