பக்கம் எண் :

748திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


685. எருதேகொணர்கென் றேறியங்கை

யிடுதலை யேகலனாக்

கருதேர்மடவா ரையம்வவ்வாய்

கண்டுயில் வவ்வுதியே

ஒருதேர்கடாவி யாரமரு

ளொருபது தேர்தொலையப்

பொருதேர்வலவன் மேவியாண்ட

புறவமர் புண்ணியனே. 8

__________________________________________________

தலையே வடிவாய் (உடல் முதலியன இன்றி) உலகத்தையெல்லாம் தன்னாணையின் நடக்கச்செய்யும் சிலம்பன் என்னும் அசுரன், ராகு என்ற பெயர்தாங்கி வழிபட்ட சிரபுரம் என விளக்கியவாறு. தேவர்களுடன் கலந்து கரவாக அமுதுண்ட சிலம்பன் என்னும் அசுரனை மோகினியான திருமால் சட்டுவத்தால் வெட்ட, தலை மாத்திரமான ராகு இத்தலத்தில் பூசித்தான் என்பது வரலாறு.

8. பொ-ரை: ஒரு தேரைச் செலுத்திய அரிய போரில் பத்துத் தேர்களை அழியுமாறு சண்டையிடும் தேர் வல்லவன் ஆகிய சிபிச் சக்கரவர்த்தி வீற்றிருந்து அரசாண்ட சிறப்பினதும் அவனை வஞ்சித்துப் புறாவின் எடைக்கு எடை தசைகேட்ட பாவம் தீரத் தீக்கடவுள் வழிபட்டதுமான புறவம் என்னும் சீகாழிப் பதியில் விளங்கும் இறைவனே! தனது எருது ஊர்தியைக் கொணர்க என ஆணையிட்டு அதன்மிசை ஏறித்தனது அழகிய கையில் ஏந்திய பிரமகபாலத்தையே உண்கலனாகக் கொண்டு விரும்பும் அழகுடைய மகளிரிடும் பலியைக் கொள்ளாது அவர்களின் உறக்கம் கெடுமாறு விரகதாபம் செய்து வருதல் நீதியோ?

கு-ரை: இதுவும் புறவமர் புண்ணியனே மாதர் துயில் வவ்வியது ஏன் என்கின்றது. ஐயம் ஏற்பார் ஊர்தியேறிச் செல்லார் ஆகவும் எருதைக் கொணர்க, என்று ஆணையிட்டு அதில் ஏறி.

கருதேர் மடவார் - கருவைத்தேரும் மடவார்; காமினிகள். கருது ஏர் மடவார் எனப் பிரித்தலுமாம். ஒருதேரைச் செலுத்தி, பத்துத்தேரை வென்ற தேர்வல்லவனாகிய சிபியாண்ட புறவம் எனப் பெயர்க்காரணத்தைக் குறிப்பாக உணர்த்தியது. சிபியின் தசை எடைக்கு எடைபெற்ற தீக்கடவுளாகிய புறா அப்பாவம் போக வழிபட்ட தலமாதலின் புறவம் என்றாயிற்று என்பது வரலாறு.