694. கூரார்வாளி சிலையிற்கோத்துக்
கொடிமதில் கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாளோர்
பான்மகிழ்ந் தானிடமாம்
ஆராவன்பிற் றென்னர்சேரர்
சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடநீடுந்
தென்றிருப் பூவணமே. 5
695. நன்றுதீதென் றொன்றிலாத
நான்மறை யோன்கழலே
சென்றுபேணி யேத்தநின்ற
தேவர்பிரா னிடமாம்
குன்றிலொன்றி யோங்கமல்கு
குளிர்பொழில் சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாருந்
தென்றிருப் பூவணமே. 6
_______________________________________________
5. பொ-ரை: கூர்மை
பொருந்திய அம்பை வில்லில் பூட்டி, கொடிகள் கட்டிப்
பறந்த மும்மதில்களின் கூட்டுக்களையும் ஒருசேர அழித்த
போர்வல்ல வில் வீரனும், மெல்லியலாகிய உமையம்மையை
ஒருபாகமாகக் கொண்டு மகிழ்பவனுமாகிய சிவபிரானது
இடம், குன்றாத அன்போடு பாண்டியர் சேரர் சோழர்
ஆகிய மூவேந்தர்கள் போற்றத் தேரோடும் திருவீதியையும்
மாட வீடுகளையும் உடைய அழகிய திருப்பூவணமாகும்.
கு-ரை: திரிபுரம் எரித்த
வில்லாளியாய் உமையொரு பாகங் கொண்டானிடம் இது
என்கின்றது, சிலை - வில். கூட்டழித்த - ஒருசேர அழித்த.
ஆரா அன்பில் - போதும் என்றமையாத அன்பொடு.
6. பொ-ரை: நன்மை தீமை என்பனவற்றுள்
ஒன்றும் இல்லாதவனும், நான்கு வேதங்களை அருளியவனும்,
தேவர்களின் தலைவனுமான சிவபிரான் தன் திருவடிகளை
அடைந்து அன்பர்கள் போற்றி அருள் பெறுமாறு நின்ற
இடம், பொதிய மலையில் பொருந்தி அங்கு நிறைந்த
ஓங்கிய குளிர் பொழில்களில் உள்ள மலர்களிற்
படிந்து வந்து தென்றல் முன்றில்களில் தங்கி மகிழ்விக்கும்
அழகிய திருப்பூவணமாகும்.
|