707. வெந்தலாய வேந்தன்வேள்வி
வேரறச்சாடி விண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற
மைந்தன் மகிழ்ந்தவிடம்
மந்தலாய மல்லிகையும்
புன்னைவளர் குரவின்
பந்தலாரும் பட்டினத்துப்
பல்லவ னீச்சரமே. 7
708. தேரரக்கன் மால்வரையைத்
தெற்றி யெடுக்கவவன்
றாரரக்குந் திண்முடிக
ளூன்றிய சங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த
காலமெலா முணரப்
பாரரக்கம் பயில்புகாரிற்
பல்லவ னீச்சரமே. 8
__________________________________________________
7. பொ-ரை: தகுதி இல்லாத மிக்க
கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த
வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள் எல்லோரும்
வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய
சிவபிரானது இடம், மென்மையான மல்லிகை, வளர்ந்து
பரவியுள்ள புன்னை குராமரம் ஆகியவற்றில் படர்ந்துள்ள,
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.
கு-ரை: தக்கன் யாகத்தை அழித்துத்
தேவரெல்லாரும் வழிபட நின்ற இறைவனது இடம் இத்தலம்
என்கின்றது. மந்தல் - மென்மை.
8. பொ-ரை: சிறந்த தேரை உடைய இராவணன்
பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி
அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய
தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த
சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும்
கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும்
சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு
போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச்
சேர்ந்த பல்லவனரச்சரமாகும்.
|