பக்கம் எண் :

 முதல் திருமுறையின் உரைத்திறம்77


10. ஏகபாதம் எழுகூற்றிருக்கை: பழைய உரை:

இவ்விரு மிறைக்கவிகளுக்கும் தாமே அருஞ்சொற்பொருள் முதலியவற்றை விளக்காமல் அவற்றிற்கு உரிய பழைய உரையையே கற்பார் நலம் கருதிச் சிற்சில செப்பம் செய்து ஓரளவு எளிமையுடையதாக்கி வரைந்துள்ளார். இதனால் இவ்வுரையாசிரியருடைய பழமையைப் போற்றும் பண்பு புலப்படுகிறது.

11. இன்றியமையாத இலக்கணக் குறிப்புக்கள்:

1-1. விடையேறி, மதிசூடி பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்.

ஏறி, பூசி - என்பன பெயர்ச் சொற்கள், இவற்றை வினை எச்சமாக்கிக் கவர் கள்வன் என்ற வினைத் தொகையின் முதனிலையோடு முடிப்பாரும் உளர்.

1-6. இனவெள்வளைசோர. வளைசோர்தல் ‘உடம்பு நனிசுருங்கல்’ என்னும் மெய்ப்பாடு.

2-5. பணிவாரை - அடியாரிடத்தில். இரண்டன் உருபு ஏழன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம்.

3-1. ஒத்தன சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த.

மந்திர புட்பம் இடுவதற்காக வலக்கையில் பூவை வைத்து அர்க்கிய ஐலத்தைச் சொரிந்து கையை மூடி அபிமந்திரித்துப் பலர் கூடி வேத மந்திரங்களைச் சொல்லுங்காலத்து அடியவர் தொழுவராதலின், சொல்லி என்ற செய்து என் எச்சத்தைச் சொல்ல எனச் செயவென் எச்சமாகப் பொருள் செய்ய வேண்டும்.

7-7. நீறுப்பூச்சும் - நீற்றுப்பூச்சும் எனற்பாலது ஓசைநோக்கி இரட்டாதாயிற்று.

8-7. வெண்டலை மாலை - உம்மைத் தொகை. வெண்தலைகளையும் மாலைகளையும் கலந்து அணிந்த திருமேனியை உடையவர்.

10-2. ஆமாம்பிணை - ஆமாப்பிணை என்பது எதுகை நோக்கி ஆமாம்பிணை ஆயிற்று.