பக்கம் எண் :

 68. திருக்கயிலாயம்781


732. வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும்

வேணுபுரந் தன்னுள்

நாவுய்த்தனைய திறலான்மிக்க

ஞான சம்பந்தன்

பேசற்கினிய பாடல்பயிலும்

பெருமான் பழனத்தை

வாயிற்பொலிந்த மாலைபத்தும்

வல்லார் நல்லாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: மூங்கில் மரங்கள் முத்துக்களோடு ஓங்கி வளர்ந்து மணம் பரப்பும் வேணுபுர நகரில் உள்ள, நாவினால் வல்ல திறன் மிக்க ஞானசம்பந்தன் திருப்பழனப் பெருமான் மீது, பேசற்கினிய பாடல்களாய்த் தன் வாயால் பாடிய இப்பதிகப் பாமாலை பத்தையும், இசையுடன் பாடவல்லவர் நல்லவர் ஆவார்.

கு-ரை: பேசற்கு இனிய இப்பாடல் பத்தையும் வல்லார் நல்லார் என்கின்றது. வேய் முத்து - மூங்கிலில் தோன்றிய முத்து. விரை - மணம்.

திருஞானசம்பந்தர் புராணம்

பழனத்து மேவிய முக்கட்

பரமேட்டி யார்பயில் கோயில்

உழைபுக் கிறைஞ்சிநின் றேத்தி

உருகிய சிந்தைய ராகி

விழைசொற் பதிகம் விளம்பி

விருப்புடன் மேவி அகல்வார்

அழனக்க பங்கய வாவி

ஐயாறு சென்றடை கின்றார்.

- சேக்கிழார்.