68. திருக்கயிலாயம்
பதிக வரலாறு:
திருக்காளத்தியைத் தொழுது பாடிய
காழிப்பிள்ளையார், அதற்கு அப்பால் வடக்கிலும்
மேற்கிலும் தமிழ் வழங்கும் நாடின்மையால், காளத்தியிலிருந்தபடியே
தேவர் வழிபாடு செய்யும் திருக்கயிலையை நினைந்து
‘பொடிகொள் உருவர்’ என்னும் இப்பதிகத்தை
அருளிச் செய்தார்.
பண்: தக்கேசி
பதிக எண்:68
திருச்சிற்றம்பலம்
733. பொடிகொளுருவர் புலியினதளர்
புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர்
கறைசேர் கண்டத்தர்
இடியகுரலா லிரியுமடங்கல்
தொடங்கு முனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார்
கயிலை மலையாரே. 1
__________________________________________________
1. பொ-ரை: மேகங்களின் இடிக்குரல் கேட்டு
அஞ்சிய சிங்கங்கள், நிலைகெட்டு ஓடத்தொடங்கும்
சாரலை உடைய கயிலை மலையில் வாழும் இறைவர், திருநீறு
பூசிய திருமேனியை உடையவர். புலியின் தோலை உடுத்தவர்.
முப்புரி நூல் விளங்கும் மார்பில் மணம் கமழும்
கொன்றை மாலையோடு திருநீற்றையும் அணிந்தவர்.
விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவர். விரைந்து
செல்லும் விடை மீது ஏறி அவ்விடை எழுதிய கொடி ஒன்றையே
தம் கொடியாகக் கொண்டவர்.
கு-ரை: கயிலைநாதனின் திருமேனிப்பூச்சு,
உடை, ஆடை, அணி, ஊர்தி முதலியவற்றைக் கூறுகின்றது.
பொடி விபூதி. அதள் - தோல். பொடிகொள் உருவர் என்றது
திருமேனி முழுதும் பூசப்பட்டதைக் குறித்தது. நீற்றர்
என்பது மார்பில் அணிந்ததைக் குறித்தது. கறை - விடம்.
இடிய குரலால் - இடிக்குரலால். இரியும் - நிலைகெட்டு
ஓடுகின்ற. மடங்கல் - சிங்கம். கடிய விடை - வேகமான
இடபம்.
|