பக்கம் எண் :

790திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


742. போரார்கடலிற் புனல்சூழ்காழிப்

புகழார் சம்பந்தன்

காரார்மேகங் குடிகொள்சாரற்

கயிலை மலையார்மேல்

தேராவுரைத்த செஞ்சொன்மாலை

செப்பு மடியார்மேல்

வாராபிணிகள் வானோருலகின்

மருவு மனத்தாரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

11. பொ-ரை: கரையோடு போர் செய்யும் கடலினது நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய புகழ் பொருந்திய ஞானசம்பந்தன், கரிய மேகங்கள் நிலையாகத் தங்கியுள்ள சாரலை உடைய கயிலைமலை இறைவர்மேல் தெளிந்துரைத்த இச்செஞ்சொல் மாலையாகிய திருப்பதிகத்தை ஓதும் அடியவர்பால் பிணிகள்வாரா. அவர்கள் வானோர் உலகில் மருவும் மனத்தினராவர்.

கு-ரை: கயிலைமலையாரைச் சொன்ன செஞ்சொல் மாலை வல்லார்மேல் பிணிகள் வாரா; வானோர் உலகத்தில் மருவுவர் என்கின்றது. தேரா - தெளிந்து.

திருஞானசம்பந்தர் புராணம்

அங்கண்வட திசைமேலும் குடக்கின் மேலும்

அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்,

திங்கள்புனை முடியார்தந் தானந் தோறும்

சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல,

மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப

வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்,

செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்

தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.

- சேக்கிழார்.