69. திருவண்ணாமலை
பதிக வரலாறு:
திரு அறையணிநல்லூரை வழிபட்ட புகலிப்
பிள்ளையார் தேவரும் முனிவரும் வணங்கும் திருவண்ணாமலையை
அன்பர்கள் காட்டக்கண்டார். அண்ணாமலை,
சிவனுருவாகக் காட்சி வழங்குதலும், தமது கண்களால்
அக்காட்சியைப் பருகி, பெருமானை வழிபட்டு இப்பதிகத்தைப்
பாடினார்கள்.
பண்: தக்கேசி
பதிக எண்: 69
திருச்சிற்றம்பலம்
743. பூவார்மலர்கொண் டடியார்தொழுவார்
புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்க ளெரித்தவன்று
மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித்
தொறுவின் னிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல்
அண்ணா மலையாரே. 1
__________________________________________________
1. பொ-ரை: நீர்த்துளிகளைத் தூவும்
கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய,
அதனைக் கேட்டு அஞ்சியகாட்டுப் பசுக்களின் மந்தைகளான
வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை
இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத்
தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும்,
அழியா வரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து
அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய
பெருமையுடையவர்.
கு-ரை: அடியார்கள் மலர்கொண்டு
அடிவணங்குவார்கள்; தேவர்கள் தோத்திரிப்பார்கள்;
இங்ஙனமாகத் திரிபுரம் எரித்த பெருமான் அண்ணாமலையார்
ஆவர் என்கின்றது. பூ ஆர் மலர் - போதும் விரிந்த
பூவும். மூவார் - அழியாதவர்கள். மூவர் - திரிபுராதிகள்.
தொறுவின் நிரையோடும் - ஆட்டு மந்தை வரிசையோடும்.
ஆமாம் பிணை - காட்டுப்பசுக்கள்.
|