பக்கம் எண் :

 69. திருவண்ணாமலை793


746. இழைத்தவிடையா ளுமையாள்பங்க

ரிமையோர் பெருமானார்

தழைத்தசடையார் விடையொன்றேறித்

தரியார் புரமெய்தார்

பிழைத்தபிடியைக் காணாதோடிப்

பெருங்கை மதவேழம்

அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல்

அண்ணா மலையாரே. 4

__________________________________________________

யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகம நூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.

கு-ரை: ஞானப்பிழம்பாய் நிற்கும் அண்ணாமலையார் நல்ல அடியார்மேல் வருங்குற்றங்களை நீக்குவதும் உண்மையே போலும் என்கின்றது.

திரள் - பிழம்பு. ஊனத்திரள் - குறைகளின் குவியல்; உடம்பு என்றுமாம். உண்மைப்பொருள் - சத்தியம் போலும் என்பது ஒப்பில் போலி. ஏனத்திரள் - பன்றிக்கூட்டம். ஆனை - யானை.

4. பொ-ரை: தன்னைவிட்டுப் பிரிந்த பெண் யானையைக் காணாத பெரிய கையை உடைய மதம் பொருந்திய ஆண் யானை, குரல் கொடுத்து அழைத்துத் திரிந்து அலுத்து உறங்கும் சாரலை உடைய திருவண்ணாமலை இறைவர், நூல் போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர். விடைமீது ஏறிச் சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

கு-ரை: உமைபங்கர், தேவதேவர், தாழ்சடையார், விடையேறி, திரிபுரம் எய்தவர் இவர் என்கின்றது.

இழைத்த - நூலிழையின் தன்மையையுடைய, தரியார் - பகைவர். பிழைத்த - தவறிய. பெரிய களிறு தன்னை விட்டுப் பிரிந்த பெண்யானையைக் காணாமல் அழைத்துச் சுற்றி அலுத்துப்போய் உறங்கும் சாரல் என மலையியற்கை கூறியவாறு.