751. தேடிக்காணார் திருமால்பிரமன்
றேவர் பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த
முத்தம் பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக்
கொள்ள வம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல்
அண்ணா மலையாரே. 9
752. தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா
பேணித் தொழுமின்கள்
வட்டமுலையா ளுமையாள்பங்கர்
மன்னி யுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும்
அண்ணா மலையாரே. 10
__________________________________________________
9. பொ-ரை: மலையை மூடி ஓங்கி வளர்ந்த
பழமையான மூங்கில் மரங்கள் உகுத்த முத்துக்கள்
பலவற்றைக் குறவர்குலப் பெண்கள் ஓரிடத்தே குவித்து
வைத்து அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து
ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து அளிக்கும் திருவண்ணாமலை
இறைவனாகிய தேவர் பெருமானைத் திருமால் பிரமன்
ஆகிய இருவர் தேடிக் காணாதவராயினர்.
கு-ரை: மாலும் அயனும் பெருமானைத் தேடிக்
காணாராயிருக்கக் குறத்தியர் மூங்கில் முத்துக்களைக்குவித்து,
வாங்கிக்கொள்ள வாருங்கள் என்றழைக்கும் அண்ணாமலை
என்கின்றது. வேய் உகுத்த முத்தம் - மூங்கிலில் பிறந்த
முத்துக்கள்.
10. பொ-ரை: தடுக்கை அக்குளில் இடுக்கிக்
கொண்டு தலை மயிரை ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய்
ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின்
சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான
தனங்களைக் கொண்ட உமையம்மையின் பங்கராய்,
மலைச்சாரல்களில் சிங்க ஏறுகள் கூட்டமாய்
|