70. திருவீங்கோய்மலை
பதிக வரலாறு:
திருப்பைஞ்ஞீரலியை வணங்கி மண்பரவுந் தமிழ்மாலைகளைப்பாடிப்
பிறதலங்களையும் வழிபட எண்ணிய சண்பை நாடர், திருவீங்கோய்மலையை
அடைந்தார். அங்கு, கங்கைச் சடையர் கழல்பணிந்து
"வானத்துயர் தண்" என்னும் இசைப் பதிகம்
பாடினார்.
பண்: தக்கேசி
பதிக எண்: 70
திருச்சிற்றம்பலம்
754. வானத்துயர்தண் மதிதோய்சடைமேன்
மத்த மலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள்
தேவி பாகமாக்
கானத்திரவி லெரிகொண்டாடுங்
கடவு ளுலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே. 1
__________________________________________________
1. பொ-ரை: வானத்தில் உயர்ந்து
விளங்கும் குளிர்ந்த சந்திரன் தோயும் சடைமுடிமேல்
ஊமத்தம் மலர்களைச் சூடித் தேன் போன்ற இனிய
மொழிகளையும் மான் விழிபோலும் கண்களையுமுடைய
உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு சுடுகாட்டில் இரவில்
எரியேந்தி ஆடும் இறைவர் உலக மக்கள் உணர்ந்து
போற்றுமாறு பன்றிகள் பலகூடி இறங்கிவரும் சாரலையுடைய
திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார்.
கு-ரை: பிறை, மத்தம் இவற்றைச்சூடி,
தேவியைப் பாகமாகக் கொண்டு, நள்ளிரவில் நடமாடும்
பெருமான் ஈங்கோய் மலையார் என்கின்றது. கான் -
சுடுகாடு. ஏனத்திரள் - பன்றியின் கூட்டம்.
|