803. பின்னுசடைகள் தாழக்கேழ
லெயிறு பிறழப்போய்
அன்னநடையார் மனைகடோறு
மழகார் பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார்
புறவம் பதியாக
என்னையுடையா னிமையோரேத்த
வுமையோ டிருந்தானே. 6
804. உண்ணற்கரிய நஞ்சையுண்
டொருதோ ழந்தேவர்
விண்ணிற்பொலிய வமுதமளித்த
விடைசேர் கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப்
புறவம் பதியாக
எண்ணிற்சிறந்த விமையோரேத்த
வுமையோ டிருந்தானே. 7
____________________________________________________
6, பொ-ரை: என்னை அடிமையாக உடைய
இறைவன், முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து
தொங்க மாலையாகக் கோத்தணிந்த பன்றியின்
பற்கள் விளங்கச் சென்று, அன்னம் போன்ற
நடையினையுடைய மகளிரின் இல்லங்கள்தோறும் அழகு
பொருந்தப் பலியேற்று, புன்னை தாழை முதலியன
நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம்
என்னும் சீகாழியைத் தனது பதியாகக்கொண்டு
உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.
கு-ரை: என்னையுடையான் சடைதாழ,
பன்றிக்கொம்பு மார்பில்விளங்க, பெண்கள்
மனைதோறும் சென்று பிச்சை எடுத்துப் புறவம்பதியாக
இருந்தான் என்கின்றது. கேழல் எயிறு - பன்றிப்
பல்.
யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தான்
உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள்
விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத்
தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய
கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள்
பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட
புறவம் என்னும்
|