824. தேனுமாயமுதமாய்த்
தெய்வமுந்தானாய்த்
தீயொடுநீருடன் வாயுவாந்தெரியில்
வானுமாமெனதுரை தனதுரையாக
வரியராவரைக்கசைத் துழிதருமைந்தன்
கானமான்வெருவுறக் கருவிரலூகங்
கடுவனோடுகளுமூர் கற்கடுஞ்சாரல்
ஏனமானுழிதரு மிலம்பையங்கோட்டூ
ரிருக்கையாப்பேணியென்
னெழில்கொள்வதியல்பே. 5
____________________________________________________
5. பொ-ரை: தேன், அமுது ஆகியன போல
இனிப்பவனாய். தெய்வம் தானேயானவன். தீ, நீர்,
வாயு, வான், மண் ஆகிய ஐம்பூத வடிவினன். தன் உரைகளை
என் உரைகளாக வெளிப்படுத்தியவன். உடலில்
வரிகளை உடைய பாம்பைத் தன் இடையிலே கட்டிக்
கொண்டு திரிபவன். மான்கள் அஞ்சும்படி கரிய
விரல்களை உடைய பெண் கருங்குரங்கு ஆண் குரங்கோடு
காட்டில் உகளும் பாறைகளையுடைய கடுமையான
மலைச்சாரலில் பன்றிகளும் காட்டுப் பசுக்களும்
திரியும் இலம்பையங்கோட்டூரைத் தன்
இருப்பிடமாகக் கொண்டு தன்னை வழிபட வந்த என்
அழகைக் கவர்ந்து கொள்ளல் முறையோ?
கு-ரை: தேன் முதலிய இனிய
பொருள்களாய், ஐம்பூதமாய், அராப்பூண்டு அலையும்
மைந்தன் என் அழகைக் கொள்வது இயல்பாகுமா
என்கிறாள். தேன், இதயத்திற்கு வலிவூட்டி உடல்
வளர்க்கும் இனித்த மருந்தாவது. அமுதம், அழியாமை
நல்கும் மருந்து. இவையிரன்டும் எடுத்த பிறவிக்கு
மட்டுமே இன்பம் அளிப்பன. தெய்வம் எடுத்த
எடுக்கப்போகின்ற பிறவிகட்கும், பிறவியற்ற
பேரின்ப நிலைக்கும் இன்பம் அளிப்பது ஆதலால்
தேனுமாய். அமுதமாய் என்றருளிய பிள்ளையார் அடுத்து
தெய்வ முந்தானாய் என்கிறார்கள்
தீயொடு.....வானுமாம் என்றதால் பூமி
யொழிந்த ஏனைய நாற்பூதங்களைக் குறித்தார்கள்.
பாரிசேடத்தால் பூமியும்கொள்க.
கானமான் வெருவுற - காட்ட மான் அஞ்ச.
கருவிரல் ஊகம் - கரிய விரலையுடைய பெண் குரங்கு.
கடுவன் - ஆண்குரங்கு. உகளும் - தாவும். ஏனம் ஆன்
உழிதரும் - பன்றியும் காட்டுப்பசுவும் திரியும்.
|