829. உரிஞ்சனகூறைக ளுடம்பினராகி
யுழிதருசமணருஞ் சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வனெனதுரை தனதுரையாகப்
பெய்பலிக்கென்றுழல் பெரியவர்பெருமான்
கருஞ்சினைமுல்லைநன் பொன்னடைவேங்கை
களிமுகவண்டொடு தேனினமுரலும்
இருஞ்சுனைமல்கிய விலம்பையங்கோட்டூ
ரிருக்கையாப்பேணியென்
னெழில்கொள்வதியல்பே. 10
___________________________________________________
கிளர்மழை தாங்கினான் - இந்திரனால்
ஏவப்பட்ட மழையைக் கோவர்த்தனகிரியைக்
குடையாகத் தூக்கித் தடுத்தவனாகிய திருமால்.
உளம் அழை - மனத்தால் அழைக்கின்ற.
மழையைப்போல மூங்கிலிலைமேல் துளிவிழ,
மலைப்பாம்பு திரிகின்ற கோட்டூர் என்க. மாசுணம்
- மலைப்பாம்பு.
10. பொ-ரை: ஆடைகளை
உரிந்துவிட்டாற் போன்ற அம்மண உடம்பினராய்த்
திரியும் சமணர்களும், சாக்கியர்களாகிய
பேய்களும் அறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய்
விளங்குவோன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக
வெளிப்படுத்தியவன். ஊரார் இடும் பலியை
ஏற்பதற்கெனப் பிட்சாடனனாய்த் திரிபவன்.
பெரியோர்களுக்கெல்லாம் தலைவன். அத்தகையோன்,
பெரிதான அரும்புகளை உடைய முல்லையும், பொன்
போன்று மலரும் வேங்கையும், மகிழ்ச்சி நிறைந்த
முகத்தோடு வண்டுகளும், தேனீக்களும் முரலும் பெரிய
சுனைகளும், நிறைந்து காணப்படும்
இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக்
கொண்டு, என் எழிலைக் கவர்தல் முறையோ?
கு-ரை: புறச்சமயிகள் பெறுதற்கரிய
பெருஞ்செல்வம் போன்றவன், பலிக்கென்று உழல்
பெரியவர் பெருமான், இவ்வூரை இருக்கையாகப்பேணி
என் எழில்கொள்வதியல்பா என்கிறாள்.
உரிஞ்சன கூறைகள் - உரிந்தாற்போன்ற
ஆடைகள். உழி தரு - திரிகின்ற. கருஞ்சினை - பெரிய
அரும்போடுகூடிய.
பொன் அடை வேங்கை - பொன் போன்ற
பூக்களையுடைய வேங்கை. இரும்சுனை - பெரிய
நீர்ச்சுனை.
|