பக்கம் எண் :

856திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


77. திருஅச்சிறுபாக்கம்

பதிக வரலாறு:

திருக்கழுக்குன்றத்தை வணங்கி எழுந்தருளிய பிள்ளையார் என்பு அணியும் பரமன் இனிதே ஆட்சிசெய்யும் அச்சிறுபாக்கம் என்னும் தலத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள ஆதிமுதல்வரை வணங்கினார். ‘அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே‘ என்னும் இறுதியான் முடியும் ‘பொன் திரண்டன்ன‘ என்னும் இப்பதிகத்தைப் பாடினார்.

பண்: குறிஞ்சி

பதிக எண்: 77

திருச்சிற்றம்பலம்

831. பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப்

பொருகடற்பவளமொ டழனிறம்புரையக்

குன்றிரண்டன்ன தோளுடையகலங்

குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர்

மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை

மெல்லியலாளையோர் பாகமாப்பேணி

அன்றிரண்டுருவ மாயவெம்மடிக

ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 1

_______________________________________________

1. பொ-ரை : அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத் தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார்.

கு-ரை: அச்சிறுபாக்கத்தை ஆட்சிகொண்ட சிவன், சடை, பவளக்கொடியையும் தீவண்ணத்தையும் ஒத்துப்புரள, மலை திரண்