பக்கம் எண் :

858திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


833. காரிருளுருவ மால்வரைபுரையக்

களிற்றினதுருவுகொண் டரிவைமேலோடி

நீருருமகளை நிமிர்சடைத்தாங்கி

நீறணிந்தேறுகந் தேறியநிமலர்

பேரருளாளர் பிறவியிற்சேரார்

பிணியிலர்கேடிலர் பேய்க்கணஞ்சூழ

ஆரிருண்மாலை யாடுமெம்மடிக

ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 3

__________________________________________________

என்று விரும்பி உருக ஆன்மாவிற்கு மகிழ்ச்சியை விளைவிப்பவர். ஒன்று - இடபம். வானகம் இறந்து - போகபூமியாகிய வானகத்துப் பொருந்தலாகாமையின் அவர்களும் போகிகளாயிருத்தலின் பொருந்த மாட்டாமையின் அதனைக்கடந்து.

3. பொ-ரை: அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத் தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். நீர்வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன்மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.

கு-ரை: அவர், உமை பெண்யானையின் வடிவங்கொள்ள, ஆண் யானையாய்த் தொடர்ந்து சென்றும், நீர்மகளைச் சடையில் தாங்கியும், விடையேறியும், நீறுபூசியும் விளங்கும் நிமலர், பேரருளாளர், பேய்க்கணம் புடைசூழ நள்ளிருளில் நடமாடுபவர் என்கின்றது.

கார் இருள் உருவம் மால் வரை புரைய - கறுத்த இருட்பிழம்பின் உருவத்தையும், கரியமலையையும் ஒத்த. அரிவை - பெண் யானையாகிய உமாதேவி. இது ‘பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு‘ நடந்தமையைக் காட்டுவது. நீர் உருமகள் - கங்கையாகிய அழகிய மகள். பிறவியில் சேரார் - இங்ஙனம் நினைத்த வடிவத்தைத் தாமே மேற்கொள்ளுதலன்றி, வினைவயத்தான் வரும் பிறவியில் சேராதவர். ஆர் இருள் மாலை - நிறைந்த இருட் கூட்டம்.