பக்கம் எண் :

864திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


841. மைச்செறிகுவளை தவளைவாய்நிறைய

மதுமலர்ப்பொய்கையிற் புதுமலர்கிழியப்

பச்சிறவெறிவயல் வெறிகமழ்காழிப்

பதியவரதிபதி கவுணியர்பெருமான்

கைச்சிறுமறியவன் கழலலாற்பேணாக்

கருத்துடைஞானசம் பந்தனதமிழ்கொண்

டச்சிறுபாக்கத் தடிகளையேத்து

மன்புடையடியவ ரருவினையிலரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

11. பொ-ரை: கருநிறம் பொருந்திய குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும், புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு பசிய இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப் பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத் தலைவனும், கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாத கருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர்.

கு-ரை: இது, இறைவன்திருவடியன்றி வேறொன்றையும் பேணாத ஞானசம்பந்தர் தமிழைக் கொண்டது. இத்தலத்து இறைவனை ஏத்தும் அடியார்கள் வினையிலர் என்கின்றது. குவளைப் பூக்கள் தவளையினுடைய வாய்நிரம்ப மதுவைப் பொழிகின்ற பொய்கை என்க. பச்சு இறவு புதுமலர் கிழிய எறி வயல் - பசிய இறால்மீன் புதுமலர் கிழியத் துள்ளும் வயல். மறி - மான்.

திருஞானசம்பந்தர் புராணம்

ஆதிமுதல் வரைவணங்கி ஆட்சிகொண்டார் எனமொழியும்
கோதில்திருப் பதிகஇசை குலாவியபா டலிற்போற்றி
மாதவத்து முனிவருடன் வணங்கிமகிழ்ந் தின்புற்றுத்
தீதகற்றுஞ் செய்கையினார் சின்னாளங் கமர்ந்தருளி.

- சேக்கிழார்.