78. திருஇடைச்சுரம்
பதிக வரலாறு:
திருவான்மியூரில் சிலநாள்
தங்கியிருந்த புகலிப் பிள்ளையார் பல பதிகளை
வணங்கத் திருவுளத்தெண்ணி விடையூரும் வித்தகரின்
இடைச்சுரத்தைச் சேர்வுற்றார். அங்கே அடியார்கள்
எதிர்கொண்டழைத்துச் சென்றார்கள். கோபுரத்தை
வணங்கினார். உட்புகுந்தார். நற்கோயிலை
வலங்கொண்டார். இறைவன் திருமுன்பு அடைந்தார்.
கண்டார். கண்ட பொழுதே அன்புமீதூரக் கை
தலைமேற்குவிய, நிலத்திடை நீள்மரம்போல்
விழுந்து நமஸ்கரித்து எழுந்து அளவற்ற
மகிழ்ச்சியுடன் பெருமான் திருமேனி வண்ணங்கண்டு
அதிசயித்தார். "இடைச்சுரம் மேவிய இவர் வணம்
என்னே" என்று அருந் தமிழ்த் திருப்பதிகமாகிய
‘வரிவளரவிரொளி‘ என்னும் இதனை அருளிச்
செய்தார்கள்.
பண்: குறிஞ்சி
பதிக எண்: 78
திருச்சிற்றம்பலம்
842. வரிவளரவிரொளி யரவரைதாழ
வார்சடைமுடிமிசை வளர்மதிசூடிக்
கரிவளர்தருகழல் கால்வலனேந்திக்
கனலெரியாடுவர் காடரங்காக
விரிவளர்தருபொழி லிளமயிலால
வெண்ணிறத்தருவிக டிண்ணெனவீழும்
எரிவளரினமணி புனமணிசார
லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே. 1
____________________________________________________
1.
பொ-ரை: மரங்கள் வளர்ந்த விரிந்த
பொழில்களில் இளமயில்கள் ஆடுவதும், வெண்மையான
நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக்
குறிப்போடு வீழ்வதும், எரி போன்று ஒளிரும்
ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய
மலைச் சாரலை உடைய திருஇடைச்சுரத்தில்,
வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே
கட்டி, நீண்ட சடைமுடிமீது வளரும் பிறை மதியைச் சூடி
யானை உருவம் பொறித்த வீரக் கழலைக்
|