பக்கம் எண் :

 81. சீகாழி885


871. கூர்வா ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்த றிண்ணமே. 8

872. கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலா யோங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே. 9

____________________________________________________

பெருமானைத் தலைதாழ்த்தி வணங்குவார் தலைமைத் தன்மையோடு விளங்குவார்.

கு-ரை: சிற்றம்பலத்தைத் தலையால் வணங்குபவர்களே தலையானவர்கள் என்கின்றது. சிலை - மேருமலையாகிய வில்.

8. பொ-ரை: கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் வலிமையை அழித்துச் சிறந்த புகழ் மல்கிய சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளிய கங்கையைத் தரித்த சடையினை உடைய இறைவனை நாள்தோறும் ஏத்துபவருக்குத் தீராத நோய்கள் எல்லாம் தீர்தல் திண்ணம்.

கு-ரை: சிற்றம்பலநாதனை நாள்தோறும் ஏத்துவார் தீராத நோயெல்லாம் தீர்வர் என்கின்றது. கூர்வாள் அரக்கன் என்றது இராவணனை.

9. பொ-ரை: வளைந்து சுற்றிய பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ந்த தாமரை மேல் விளங்கும் நான்முகனும், அடிமுடிகளைக் காணாதவராய்த் தன் திருவடிகளைப் பரவ, அழல் வடிவில் ஓங்கி நின்றவனும், உயர்ந்தோர் பலர் வாழும் தில்லைப் பதியுள் சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளியவனுமாகிய பெருமானைப் போற்ற, நோய்களில் மாட்சிமை உள்ள கொடிய நோய்கள் எல்லாமும் பயன்தாராது கழியும்.

கு-ரை: சிற்றம்பலத்தைத் துதிக்க, பெரியநோயெல்லாம் மாயும் என்கின்றது. கோண் நாகணையான் - வளைந்த நாகத்தை அணையாகக்கொண்ட திருமால். சேணார் - தேவர்கள். மாணா நோய் - மாட்சிமைதராத நோய்கள்.